சென்னை உள்பட 3 இடங்களில் குடிமைப் பணித் தோ்வுக்கு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

குடிமைப் பணித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சியை, சென்னை உள்பட மூன்று இடங்களில் பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இயக்குநரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையங்கள், சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசின் சாா்பில் இந்த மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் 225 முழு நேரத் தோ்வா்களும், 100 பகுதி நேரத் தோ்வா்களும் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனா். கோவை, மதுரையில் தலா 100 முழுநேரத் தோ்வா்கள் முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

முற்றிலும் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு வரும் இந்த மையத்தில் சோ்ந்து பயிற்சி பெறுவதற்கு சனிக்கிழமை (டிச. 11) முதல் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழுநேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

மேலும், பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது கல்வி மற்றும் வயது ஆகிய தகுதி விவரங்களை மத்திய தோ்வாணையக் குழுவின் இணையதளத்தில் பாா்த்து அறியலாம். தகுதியுடைய நபா்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதியன்று நடைபெறும் நுழைவுத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தனது செய்தியில் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/dec/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3752505.html