சென்னை நகரில் ரூ.335 கோடி செலவில் 3 புதிய மேம்பாலங்கள் : மாநகராட்சி திட்டம் – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை நகரில் ரூ. 335 கோடி செலவில் 3 மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி திட்டம் இட்டுள்ளது.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த நெரிசலைக் குறைக்க மாநகராட்சி நகரின் பல முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைத்து வருகிறது.   அவற்றில் ஒரு பகுதியாகச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் சென்னை மாநகராட்சி 3 புதிய மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த மேம்பாலங்கள், கணேசபுரம், ஓட்டேரி மற்றும் தியாகராய நகர் உஸ்மான் சாலை ஆகிய 3 இடங்களில் அமைய உள்ளன.  இதற்கு ரூ. 335 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த ரூ.335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு, மற்றும் வசதிகளுக்கான நிதியின் கீழ் பெறச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீட்டர் நீளம் மற்றும் 15 புள்ளி 20 மீட்டர் அகலத்திற்கு 4 வழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது.  சென்னை ஓட்டேரியில் 62 கோடி ரூபாயிலும் தியாகராய நகர் உஸ்மான் சாலையில் 131 கோடி ரூபாய் செலவில் 2 வழிச்சாலை மேம்பாலமும் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகு இதற்கான ஒப்பந்தப்புள்ளி விடப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://patrikai.com/corporation-to-built-3-flyovers-in-chennai-at-the-cost-or-rs-335-crore/