தக்காளி விலை ஏன் குறையவில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் தக்காளி விலை பெருமளவில் ஏன் குறையவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் தமிழகத்தில் தக்காளி விலை உச்சம் அடைந்தது. ஒரு கிலோ 100 முதல் அதிகபட்சமாக 140 ரூபாய் வரை அதிகரித்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

நீதிமன்ரம் உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிபதி, தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டு, இடத்தின் பயன்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்ததவிட்டிருந்தார்.

இன்றும் வழக்கு விசாரணை

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஓரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை என்றும், 50.1 செண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மார்கெட் கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில், 94 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், கடைகளுக்கு அருகில் வாகன நிறுத்த வசதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிபதி, ஒதுக்கப்பட்ட இடத்தில் தக்காளி இறக்குவதை தவிர, வேறு எந்த பணியும் நடைபெறவில்லை என்பதை வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென்றும், அப்படி நடந்தால் அதற்கு மனுதாரர் பொறுப்பேற்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் லாரிகளில் வரும் தக்காளியை இறக்கி ஏற்றுவதற்கான இடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலும், தக்காளி விலை ஏன் பெருமளவில் குறையவில்லை என கேள்வி எழுப்பினார்.

பொங்கல் வரை அனுமதி

வியாபாரிகள் சங்கம் தரப்பில் தென் மாநிலங்களில் கன மழை காரணமாக விளைச்சல் இல்லை என்றும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் வரத்து குறைவாகத்தான் உள்ளாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, எதிர்பார்க்கப்பட்ட அள்வில் இல்லாவிட்டாலும் விலை ஓரளவு குறைந்துள்ளதால், தக்காளி மார்கெட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்துவதற்கு பொங்கல் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். விலையை கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் லாரிகளை வரவழைக்கலாம் எனவும் அறிவுறுத்தினார். .தக்காளி இறக்கி ஏற்றும் இடத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறினால் அந்த வாகனங்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Chennai High Court has questioned why the price of tomatoes, which was allowed to park lorries at the koyambed market, did not fall sharply.

Source: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-high-court-has-questioned-why-the-price-of-tomatoes-has-not-come-down-442272.html