சென்னை தொல்காப்பியப் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2008-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சுமார் 58 ஏக்கர் பரப்பிலான தொல்காப்பியப் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு 22.01.2011-ஆம் நாள் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. 

சென்னை அடையாறில் உள்ள இந்த தொல்காப்பியப் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார்துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள் மற்றும் சுமார் ரூ. 2,773.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன. 

பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப்பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்தும் முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  

இச்சீரமைப்புப் பணிகள் அரசின் பல்வேறு சார்துறைகளான பொதுப்பணித் துறை / நீர்வள ஆதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகள் ஆணையரகம், ஊரக வளர்ச்சி இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன. 

இச்சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, ஆற்றின் கரையோரங்களில் தாவரங்கள் நடவு செய்யக்கூடிய பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் வல்லுநர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அக்குடும்பங்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வு திட்டப் பணிகள் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்பொழுது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கழிவுநீரை இடைமறித்தல், மாற்றுவழிகளை அமைத்தல் போன்ற சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

மேலும், நீர்வள ஆதாரத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் முதல்வர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் எண்ணூர் கழிமுகப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய கடல்சார் ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இப்பூங்காவிற்கு அதிக அளவில் மாணவர்கள் வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., முதன்மைச்செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, இ.ஆ.ப., சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முதன்மைச் செயலாளர்/உறுப்பினர் செயலர் மருத்துவர் சீ.ஸ்வர்ணா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஜ்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/dec/17/mk-stalin-inspects-in-chennai-tholkappia-park-3756585.html