கோவை முதல் சென்னை வரை.. அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்! பொசுக்கப்பட்ட பள்ளி மாணவிகள்! தீர்வு என்ன – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஒரு மனிதரின் வாழ்க்கையை மிகவும் பக்குவப்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்வது பள்ளிக்கூடங்கள்தான். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை நல்வழியை நோக்கி செம்மைப்படுத்தும் உன்னத பணியை செய்பவர்கள் ஆசிரியர்கள்.

ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!

இதனால்தான் தெய்வத்துக்கு அடுத்த இடத்தில் வைத்து ஆசிரியர்கள் போற்றப்படுகிறார்கள். ஆனால் ”வேலியே பயிரை மேய்வது போல்” சமீப காலங்களில் ஒருசில ஆசிரியர்கள் செய்யும் ஈனச் செயல்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமுதாயமும் தலைகுனிந்து நிற்கிறது.

மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள்

பள்ளிகளில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றிதான் பேசுகிறேன். சமீப காலங்களில் தமிழக பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்,. கடந்த ஜூன் மாதம் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், ஆபாச செயல்களில் ஈடுபட்டும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டான். இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டான். அடுத்ததாக கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறான்.

கோவை மாணவி

இப்படி தமிழக பள்ளிகளில் பாலியல் கொடுமை ஆட்டிப்படைக்க, சில மாதங்களுக்கு முன்பு கோவையில் தமிழகமே கொதித்து போகும் ஒரு சம்பவம் நடந்தது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ”யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார் என யாரையும் விடக் கூடாது” என்று அந்த மாணவி எழுதிய கடிதம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மாணவியை சின்னாபின்னமாக்கிய காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி சிறையில் அடைக்கப்பட்டான்.

கரூர் மாணவியின் பரிதாபம்

இந்த சோகம் அடங்குவதற்குள் இன்னொரு மாணவியின் தற்கொலையும் மக்களை வேதனையில் ஆழ்த்தியது. கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் கொடுமை என்னும் அரக்கனின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். ”பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என்று அந்த மாணவி எழுதிய கடிதம் நமது ஒவ்வொருவரின் முகத்திலும் அறைவது போல் இருந்தது.

இப்போது சென்னையில்…

தற்போது சென்னை மாங்காட்டில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவியும் பாலியல் துன்புறத்தலுக்கு அநியாயமாக தனது உயிரை விட்டுள்ளார். ”’இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லைகளை நிறுத்துங்கள். மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம்” என்று அந்த மாணவி எழுதிய கடிதத்தை பார்த்து கோபம் வராவிட்டால் நாம் மனிதர்களே கிடையாது.

களையெடுக்க வேண்டும்

பள்ளிகள் மட்டுமில்லை; கல்லூரி மாணவிகளும் கொடூர ஆசியர்களின் காம பசிக்கு இரையாவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம், கடந்த சில மாதங்களாக இப்படி ஒவ்வொரு மாணவியாக தங்கள் உயிரை இழக்கும்போது ”ஐயோ பாவம்” என்று மக்கள் வேதனைப்படுவதும், அரசியல் தலைவர்கள் கடமைக்காக அறிக்கைகள் விடுவதும் வழக்கமாகி விட்டது. இந்த அனுதாபம் இதுபோல் மேலும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க உதவாது. அனைத்து மாணவிகளுக்கும் போதிய ஆலோசனை, விழிப்புணர்வு வழங்கி ”பயிரை மேயும் காமக்கொடூர வேலிகளை” முன்கூட்டியே களையெடுக்க வேண்டும்.

தீர்வு என்ன?

இத்தகைய கொடூரங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகளை வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நல்ல நடவடிக்கையாகும். இதனை அப்படியே விட்டு விடாமல் பெற்றோர்கள், மாணவிகள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரிடமும் கலந்து பேசி ‘ தமிழக பள்ளிகள், கல்லூரிகள் காமகொடூரர்களின் புகலிடம் இல்லை’ என்பதை நாட்டுக்கே பறை சாற்றும் பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டுமல்ல; நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

English summary
The list goes on and on about sexual harassment in Tamil Nadu schools in recent times.Tamil Nadu schools and colleges are not a haven for sex offenders’ is not only the responsibility of the Tamil Nadu government; Each of us has

Source: https://tamil.oneindia.com/news/chennai/sexual-harassment-has-been-on-the-rise-in-tamil-nadu-schools-in-recent-times-442593.html