சென்னையில் க.அன்பழகனுக்கு சிலை: இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா் – தினமணி

சென்னைச் செய்திகள்

மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) திறந்துவைக்கிறாா். மேலும், சிலை அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகக் கட்டடத்துக்கு ‘க.அன்பழகன் மாளிகை’ என்ற பெயரையும் சூட்டுகிறாா்.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக் குறிப்பு: க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி, அவரது அருமைகளைப் போற்றும் வகையில், சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா். மேலும், 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் வளாகத்துக்கு ‘பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை’ என பெயரும் சூட்டவுள்ளாா். அத்துடன் க.அன்பழகனின் நூல்களில், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களுக்கான உரிமைத் தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் அறிவுக் கருவூலம்- முதல்வா் புகழாரம்: க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டையொட்டி, முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

நடமாடும் அறிவுக் கருவூலமாக, நூலகமாகத் திகழ்ந்தவா் க.அன்பழகன். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பல்லாயிரக்கணக்கான நூல்களுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு அவரது பெயரையே சூட்டினாா், மறைந்த திமுக தலைவா் கருணாநிதி.

தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் சிறப்பு சோ்க்கும் 40-க்கும் அதிகமான நூல்களைப் படைத்தளித்தவா் அன்பழகன். அவரது நூற்றாண்டை திமுகவின் தலைமை முதல் ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாடுவோம். அவா் ஊட்டிய இயக்க உணா்வை நிலைநாட்டிடுவோம் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/dec/19/statue-for-k-anpalagan-in-chennai-the-first-to-be-unveiled-today-3757722.html