கோகுல இந்திரா Vs ஜெயவர்தன்! அதிமுகவில் சென்னை மேயர் வேட்பாளர் யார்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோகுல இந்திராவும் வேட்பாளர் ரேஸில் இடம்பிடித்திருக்கிறாராம்.

இதற்கு காரணம் சென்னை மாநகராட்சி பெண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படக் கூடும் என்ற பேச்சுத்தானாம்.

சென்னையை பொறுத்தவரை திமுக வலிமையாக இருப்பதால் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர்கள் எல்லா நிலைகளிலும் வளமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது தலைமையின் எண்ணமாம்.

நகர்ப்புற உள்ளாட்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அது தொடர்பான ஆயத்தப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது அதிமுக. நகராட்சி, மாநகராட்சிகளில் போட்டியிட விரும்புபவர்களின் பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் மூலம் கேட்டுப்பெற்று வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

நேரடி தேர்தல்

மேயர், நகராட்சி சேர்மன் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் முக்கிய பிரமுகர்கள் பலரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் மறைமுக தேர்தலாக இருப்பின் பலரும் போட்டியிட முன்வரமாட்டாகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பெரும் பலத்துடன் திமுக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மறைமுக தேர்தலில் எப்படியும் எதிர்பார்த்தது கிடைக்காது என்பதே இதற்கு காரணமாம்.

யார் வேட்பாளர்

இதனிடையே மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் என்றால் சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பியுமான டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வேளை மாநில தேர்தல் ஆணையத்தால் பெண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றும்பட்சத்தில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் சென்னை மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறங்கும் ஜாக்பாட் அடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

வலிமை முக்கியம்

திமுக தரப்பில் எப்படியும் வலிமையான வேட்பாளர் தான் களமிறக்கப்படுவார் என்பதை யூகித்துள்ள அதிமுக தலைமை, தங்கள் கட்சியிலும் அப்படி ஒருவரையே நிறுத்த திட்டமிட்டு வருகிறதாம். இதனிடையே சென்னையில் கவுன்சிலர் சீட் கேட்டு அதிமுகவில் விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கையே ஆயிரத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது.

English summary
Who is the AIADMK candidate for Chennai mayor?

Source: https://tamil.oneindia.com/news/chennai/who-is-the-aiadmk-candidate-for-chennai-mayor-443179.html