சென்னையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு – தினமணி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமைச் சென்னை திட்டத்தின்கீழ் இதுவரை 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கவும், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக அதே சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் வகையில் பசுமைச் சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 5 மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையின் 15 மண்டலங்களில் 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில், பசுமைச் சென்னை திட்டத்தின் கீழ் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், இதுவரை 15 மண்டலங்களில் வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 632 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாநகராட்சி பேருந்து சாலைகள், உள்புறச் சாலைகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது, அந்தப் பணிகளுடன் சோ்த்து சாலைகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளன. மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க ஆா்வமுள்ள குடியிருப்பு நலச் சங்கங்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-3761297.html