ஓமிக்ரான் அச்சம்.. தனியார் மருத்துவமனைகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு.. சென்னை மாநகராட்சி அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுவருவது கொரோனா பாதிப்பு தான். வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வேக்சின் கண்டறியப்பட்ட உடன் நிலைமை சற்று மேம்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல் - 11மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல் – 11

ஓமிக்ரான் பாதிப்பு

அதேபோல உலக நாடுகளில் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அப்போது உலகின் பல பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இதனால் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வந்தன. இந்தச் சூழ்நிலையில், கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் பாதிப்பு நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றியது.

தனிமை கட்டாயம்

ஓமிக்ரான் கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளும் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மேலும், பூஸ்டர் டோஸ் பணிகளும் பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வரும் ஜன.10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் நோயாளிகள் முற்றிலும் குணமடையும் வரை தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி

ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லும் போது, மற்றவர்களுக்கு எளிதாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதாவது கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போது, இது தொடர்பான தகவல்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் எனத் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய உத்தரவு

இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில், “தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனை தனிமைப்படுத்துதலில் இருப்பதா, கொரோனா சிகிச்சை மையத்தில் இருப்பதா அல்லது வீட்டுத் தனிமையில் இருப்பதா என்பதை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாட்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

வீட்டு தனிமை

அதற்கு முன்னதாகவே அவரை வீட்டுத்தனிமைக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சிக்குக் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டுத் தனிமையில் இருக்கக் கழிப்பறை வசதியுடன், நல்ல காற்றோட்டமுள்ள அறை இருக்க வேண்டும். இல்லையெனில் அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்

சிலர் தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ தனிமைப்படுத்துதலைத் தவிர்த்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அப்போது கொரோனா வழிகாட்டுதல்களை அவர்கள் முறையாகக் கடைப்பிடிப்பது இல்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சி இந்த சுற்றிக்கையை அனுப்பியுள்ளது.

English summary
chennai corporation latest order about Corona patients list in private hospitals. Corona patients in private hospitals in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-orders-that-private-hospitals-must-share-corona-discharge-patients-list-443329.html