சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 21 ஏக்கரில் பூங்கா; சி.எம்.டி.ஏ தகவல் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையம் அருகே 21 ஏக்கரில் பூங்கா மற்றும் விளையாட்டு வசதிகள் அமையவுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது

Chennai Kilambakkam bus terminal will have park and playground: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தின் அருகே 21 ஏக்கரில் பூங்கா மற்றும் விளையாட்டு வசதிகளை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் தலைநகரே போக்குவரத்து நெரிசலால் தள்ளாடுகிறது. எனவே தலைநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாதவரம், வண்டலுார் – கிளாம்பாக்கம், திருமழிசை – குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இவற்றில், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 88.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இங்கு புராதான சின்னங்கள் இருப்பதால் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக இந்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது. இருப்பினும், பேருந்து நிலைய கட்டுமான பணிகளை 44 ஏக்கரில் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. இதனையடுத்து, பேருந்து நிலையத்துக்கான பிரதான கட்டுமான பணிகளுக்கு 2019-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த கட்டுமான பணிகள் 400 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் 50 சதவீதம் வரை நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, 2022-ம் ஆண்டில் இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பேருந்து நிலைய திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் போது, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, வளாகத்தின் குறிப்பிட்ட அளவு நிலம், பசுமை பகுதியாக பராமரிக்கப்பட வேண்டும். இதனையடுத்து பேருந்து நிலைய பகுதி பூங்கா மற்றும் விளையாட்டு வசதிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.) உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகள் அடிப்படையில் இந்த வளாகத்தில், 21.5 ஏக்கர் நிலத்தை பசுமை பகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதிக அளவு வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும், சூழலியல் தாக்கத்தை ஈடுகட்ட, இங்கு பிரமாண்ட பூங்கா அமைக்கவும், அதில் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த சி.எம்.டி.ஏ கூட்டத்தில், இதற்கு ஒப்பதல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலைய பணிகள் முடியும் போது, இங்கு பூங்கா இருப்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப பணிகள் முடுக்கி விடப்படும் என்று கூறினார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வளாகத்தில் சோலார் பேனல் அமைக்கப்பட உள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பிரதான பகுதிக்கான கட்டடம், இரண்டு அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேல் தளத்தில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலைய பிற கட்டடங்கள், நடைமேடை ஆகியவற்றின் மேற்புறத்திலும், சோலார் வசதி அமைக்கப்படும். இதனால், இந்த வளாகத்தின் மொத்த மின் தேவையில், 50 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும். இதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சோலார் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான, முதற்கட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும் என்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-kilambakkam-bus-terminal-will-have-park-and-playground-388914/