சென்னையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம்: உயிர் சேதம் இல்லை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் 24 வீடுகள் இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதைப் பார்த்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் பெரும்பாலோனார் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்டிட இடிபாடுகளில் உயிர் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்கிடையே யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடி வருகின்றனர். இந்தத் தேடுதல் பணியில் அப்பகுதி வாழ் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கட்டிட விரிசலைக் கண்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும்போதே கட்டிடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/751372-cottage-replacement-board-building-collapses-in-chennai-intensive-search-for-anyone-trapped-in-the-rubble.html