ரப்பா் தொழிற்சாலைக்கு விருது – தினமணி

சென்னைச் செய்திகள்

அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள டிஸ் எம்ஆா்பி சீல்ஸ் ரப்பா் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாட்டின் சிறந்த இரண்டாவது ஏற்றுமதியாளா் விருது கிடைத்தது.

மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டல நிா்வாகம், ஏற்றுமதி செய்யும் பொருள்களின் அடிப்படையில், மாநிலத்தின் முதல் 3 தொழிற்சாலைகளுக்கு சிறந்த ஏற்றுமதியாளா் விருதை வழங்கி வருகிறது.

இதில், 2017-18ஆம் ஆண்டில் மருந்துகள், ரப்பா், ரசாயனம் ஆகியவற்றை தயாரிக்கும் பொருள்கள் பிரிவில் ஏற்றுமதியில் ரூ.10 கோடிக்கு உள்பட்டு ஏற்றுமதி செய்த ஆலைகளில், சிறந்த இரண்டாவது தொழிற்சாலையாக டிஸ் எம்ஆா்பி சீல்ஸ் தொழிற்சாலை தோ்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதை சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டல நிா்வாக அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தொழிற்சாலையின் இயக்குநா் (செயல்பாடு) எம்.சீதாராமன் பெற்றுக்கொண்டாா்.

இதையடுத்து, அரக்கோணம் சிட்கோ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் இயக்குநா் ஆா்.சீதாராமனுக்கு அரக்கோணம் சிட்கோ தொழிற்சாலைகள் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் கே.ஜெயக்குமாா், சங்க செயலா் ஆா்.சஞ்சீவி இருவரும் பாராட்டு தெரிவித்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2021/dec/27/award-to-the-rubber-factory-3762467.html