சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அமைச்சர் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை: சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் 19வது தெருவில் 10 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தனர்.

அப்போது, மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை நகரில் கோவிட் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னைவாசிகள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 129 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி காணப்படுகிறது. அவர்களின் மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பாதித்த 45 பேரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தான். அதனால், அவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது.

ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், தண்டையார்ப்பேட்டை ஆகிய இடங்களில் சுமார் 500 படுக்கைகளுடன் பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் படுக்கைகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. 11 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 14 லட்சம் பேருக்கு வழங்குவதற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது. இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து டிச.,31ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளர். வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் நடக்கும் தடுப்பூசி முகாம்களை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரே நாளில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், பரிசோதனையும் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவுவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் தேவைப்படும் நிலை குறைவாக உள்ளது. வரும் நாட்களில் அதிகரிப்பை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அனைவரும் கண்டறியப்படுகின்றனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தற்போதைய நிலையில் தொற்று உறுதியாகும் விகிதம் 1 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Dinamalar iPaper

கேரளாவில் ஒமைக்ரான்: தமிழக சோதனைச் சாவடிகளில் 'செக்கிங்'


கேரளாவில் ஒமைக்ரான்: தமிழக சோதனைச் சாவடிகளில் ‘செக்கிங்’ (1)

முந்தய

திருப்பதிக்கு நெய் அனுப்பி அதிலும் 'கை' வைத்த ஆவின்!


திருப்பதிக்கு நெய் அனுப்பி அதிலும் ‘கை’ வைத்த ஆவின்!

அடுத்து
வாசகர் கருத்து (1)Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2924934