பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சவுத் மெட்ராஸ் கிளப் சார்பில் விருதுகள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், இசை, கலை உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சவுத் மெட்ராஸ் கிளப் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

சவுத் மெட்ராஸ் கிளப் சார்பில் முதலாவது சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கல்வி, மருத்துவம், கலை, அறிவியல், இசை, சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை கஸ்தூரி அண்ட் சன்ஸ் தலைவரும், ‘தி இந்து’ குழுமத்தின் பதிப்பாளருமான என்.ரவி வழங்கினார்.

தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், எம்ஜிஎம் ஆஸ்பிட்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் டிசீஸஸ், டிரான்ஸ்பிளான்ட் அண்ட் ஜிஐ சர்ஜரி இயக்குநர் டாக்டர் தியாகராஜன் சீனிவாசன், இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் தலைவர் டாக்டர் கே.தர், மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் கார்டியோ வாஸ்குலர் அண்ட் தொராசிக் சர்ஜரி இயக்குநர் டாக்டர் அன்பரசு மோகன்ராஜ், மெட்வே மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் டி.பழனியப்பன், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன்ராஜன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி விற்பனை பிரிவு இயக்குநர் டி.எஸ்.சீனிவாசன் உட்பட 28 பேர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் என்.ரவி பேசும்போது, ‘‘சாதனை விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். நாட்டின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேன்மை, கடின உழைப்பு, திறமை, சமூகத்துக்கு உதவும் பண்பு போன்ற மதிப்பீடுகள் காரணமாக அவர்களை நாம் கொண்டாடுகிறோம். தங்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றனர்’’ என்றார்.

விழாவில், சவுத் மெட்ராஸ் கிளப் தலைவர் டி.எஸ்.கிருஷ்ணா, செயலாளர் கே.ஸ்ரீகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/751895-south-madras-club-awards.html