மதுரை மத்திய சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது வழக்கு பதிவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மதுரை மத்திய சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட19 கைதிகள் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை அரசரடி பகுதியில் மதுரை மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன்(வயது 54) என்பவர், ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ரவுடி சபாரத்தினத்தின் கூட்டாளியான தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ்(24) மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஜெகன் ஆகியோர் சிறையில் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அவர்கள் ஆதிநாராயணனை சிறைக்குள் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஆதிநாராயணன் சிறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுபாஷ்சந்திரபோஸ், ஜெகன் ஆகியோரை நேற்று அழைத்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் இவர்களது கூட்டாளிகளான மேலும் 16 கைதிகள் திடீரென்று சிறையில் உள்ள மரம் வழியாக சிறை கட்டிடத்தில் ஏறியும், அங்கிருந்து மதில் சுவரில் ஏறியும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கிருந்து ஓடுகள் மற்றும் கற்களை அரசரடி சாலைகளில் வீசி, சிறை நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களில் சில கைதிகள் உடலில் காயத்தை ஏற்படுத்தி கொண்டு, சத்தம் போட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் சம்பவ இடத்திற்கு உடனே சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அரசரடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுவழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்து கரிமேடு போலீசார் சிறைக்குள் விரைந்து சென்றனர். மேலும் சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய அந்த பகுதி மக்கள் வெளியே கூட்டமாக திரண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சுபாஷ்சந்திரபோஸ், ஜெகன் ஆகியோரை சிறைக்காவலர்கள் விடுவித்து, அவர்களது அறையில் அடைத்தனர். மதுரை மத்திய சிறையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்குள் ஆதிநாராயணனை தாக்கியதாக கொம்பன் என்ற ஜெகதீஷ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரிடம் ஜெயில் போலீஸ் ஏட்டு லட்சுமணன் மற்றும் போலீஸ்காரர்கள் சரவணன், கார்த்திக் ஆகியோர் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர்களிடம் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் கலவரத்தில் ஈடுபட்டதாக வெள்ளை பாண்டி மகன் முத்தமிழ் செல்வன், அப்துல்சலாம் மகன் முகமது தவ்பிக், காசிநாதன் மகன் சிவக்குமார் (எ) கோச்சா பாய், நாச்சியப்பன் மகன் கணேசன், மூர்த்தி மகன் பிரசன்னா என்ற சுள்ளான் பிரசன்னா, பிச்சைமணி மகன் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால், செல்வம் மகன் வெள்ளைராஜா என்ற அரவிந்த, மணி மகன் ஜெபமணி, காஜாநிஜாமுதீன் மகன் ரபிக்ராஜா, மாரிமுத்து மகன் மீனாட்சிசுந்தரம் என்ற மெட்ராஸ், மூக்கையா மகன் சூர்யா என்ற ஏசு, பெருமாள் மகன் மணிகண்டன் என்ற சின்டெக்ஸ் மணி, முருகன் மகன் கருப்பசாமி என்ற மதன், முனியாண்டி மகன் வாசுதேவன், சின்னசாமி மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன், அப்துல்லத்தீப் மகன் முகமதுவாசிம்கான், அழகு மகன் முருகன் என்ற குட்டை முருகன், நேதாஜி மகன் பாலாஜி என்ற மெட்ராஸ் பாலாஜி, நல்லூ மகன் ஆசா என்ற நாகமுருகன் ஆகிய 19 பேர் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஜெயில் வெளி வளாகத்தில் ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதை அறிந்த பின்னரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் கட்டிடத்தின் மேலே இருந்து கீழே இறங்கி வந்தனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/12/30155045/Case-registered-against-19-inmates-involved-in-riots.vpf