அரசு உத்தரவை மீறிய அதிகாரிகள்?.. கடுமையாக எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்.. என்ன விஷயம்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை எழும்பூரில் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டிடம், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதை சீல் வைக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதை எதிர்த்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ள எஸ் பிளஸ் மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து அரசுக்கு மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் முறையீட்டு விண்ணப்பம் அரசிடம் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்து, மனுதாரர் தரப்பு விளக்கமளிக்க அவகாசம் அளித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், அரசு நிலங்களை ஆய்வு செய்து, எல்லைகளை வரையறுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவின்படி அதிரடிப்படை அமைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

அந்த உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

புது ஆண்டில் அமைதி மலருமா?. எல்லையில் இனிப்பு பகிர்ந்து புத்தாண்டு கொண்டாடிய இந்திய-சீன ராணுவத்தினர்புது ஆண்டில் அமைதி மலருமா?. எல்லையில் இனிப்பு பகிர்ந்து புத்தாண்டு கொண்டாடிய இந்திய-சீன ராணுவத்தினர்

English summary
The Chennai High Court has warned that it will issue stern orders against the concerned authorities if it is found that the order issued to set up a task force to locate government lands and remove encroachments has not been implemented

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-has-issued-stern-warning-to-tn-govt-officials-444012.html