சென்னை ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரை கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கி இருக்கிறது. திண்டுக்கல்லில் நேற்று இரவு நாட்டு துப்பாக்கியால் ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். மீன்பிடி குத்தகை தொடர்பான தகராறில் ராகேஷை மர்ம நபர்கள் 6 முறை சரமாரியாக சுட்டனர். இதில் ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை 5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவான்மியூர் பறக்கும்  ரெயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டுள்ளனர். 

பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ரூ1.32  லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். தலைநகர் சென்னையில் புறநகர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் எழும்பூர் ரெயில்வே டிஎஸ் பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரெயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2022/01/03115313/Robbery-at-gunpoint-at-Chennai-railway-station.vpf