சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்- நாடகமாடிய ஊழியர் அதிரடி கைது – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரான டீக்காராம், அவரது மனைவி இருவரும் பணத்தை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலமானதால் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய மார்க்கத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள இடம். இங்கிருந்துதான் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு பணியாளர்கள் இறங்கி செல்வர்.

இந்த திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ1.32 லட்சம் கொள்ளை அடிக்கபட்டதாக கூறப்பட்டது. டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரான டீக்காராமை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டுவிட்டு கவுண்ட்டரில் இருந்த ரூ1.32 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சென்னையில் பயங்கரம்..திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ1 லட்சம் கொள்ளை! சென்னையில் பயங்கரம்..திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ1 லட்சம் கொள்ளை!

ஊழியரை மீட்ட போலீசார்

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கட்டிப் போடப்பட்டிருந்த நிலையில் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராமை மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டது.

துப்பாக்கி கலாசாரம் விமர்சனம்

தலைநகர் சென்னையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் விமர்சனங்களையும் எழுப்பியது. ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுகிறதா? என்கிற விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்தன.

முரணான தகவல்கள்

இதனிடையே திருவான்மியூர் கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்தார்.

டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் கைது

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம், அவரது மனைவி இருவரும் ரூ1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து டீக்காராம், அவரது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் திருவான்மியூர் கொள்ளை வழக்கு பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

English summary
Police arrested Chennai Thiruvanmiyur Railway Station counter Staff in Robbery case drama.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-thiruvanmiyur-railway-station-counter-staff-arrest-in-robbery-case-444221.html