உளவுத்துறை ரிப்போர்ட்.. சென்னை பாக்ஸ்கான் போராட்டத்திற்கு பின் யார்? தமிழ்நாட்டை குறி வைக்கும் சீனா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டத்திற்கு பின் சீனாவின் தலையீடு இருக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது. இந்த ரிப்போர்ட் பல்வேறு ஊடகங்களில் தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்கள் பூந்தமல்லி விடுதியில் உட்கொண்ட உணவு காரணமாக வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு உள்ளானார்கள். இவர்கள் எல்லோரும் நல்ல உடல்நிலையில் உள்ள நிலையில், இதில் 9 பேர் பலியாகிவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்தி பரவியது.

இதனால் ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை- – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜன.20க்குள் கட்டணம் செலுத்த உத்தரவு - யார் யாருக்கு விலக்கு தெரியுமா?12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜன.20க்குள் கட்டணம் செலுத்த உத்தரவு – யார் யாருக்கு விலக்கு தெரியுமா?

போராட்டம்

இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது. இதனால் 10 கிமீ வரை டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இது தேசிய அளவில் கவனம் பெற்றது. இதனால் சென்னையே பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. பின்னர் ஆட்சியர் வந்து பேசிய பின்தான் யாரும் சாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இறந்ததாக கூறப்பட்ட பெண்கள் வீடியோ கால் மூலம் போராட்டக்காரர்களிடம் பேசிய பின்தான் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

சீனா போராட்டம்

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பின்பு சீனா இருக்கலாம் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக The Wire ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. The Wire ஊடகத்தில் வெளியாகி இருக்கும் செய்தியில், பாக்ஸ்கானில் நடந்த போராட்டத்திற்கு பின் சீனாவின் தலையீடு இருக்கலாம். சீனாவின் கை தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு பின் இருக்கலாம். இதற்கு முன்பே சில நிறுவனங்களில் இப்படி போராட்டங்கள் நடந்து உள்ளன.

சீனா ஃபாக்ஸ்கான்

இந்தியாவில் இருக்கும் சில நிறுவனங்களை சீர்குலைக்கும் வகையில் சீனா இப்படி செய்து வருகிறது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா சீனா இடையிலான மோதல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்வதை குறைத்து வருகிறது. இதற்கு முன் 48 சதவிகித ஆப்பிள் போன சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்தியா மீது ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

சீனா ஆப்பிள்

முக்கியமாக தென்னிந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் முயன்று வருகிறது. இதனால் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை சீனா குறி வைக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை வெளியேற்றும் பணிகளை சீனா மறைமுகமாக செய்து வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் இருக்கும் Wistron Infocomm manufacturing நிறுவனத்தில் சமீபத்தில் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு மோதல் ஏற்பட்டது.

சீனா கர்நாடகா

இதனால் அப்போது உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கு பின்பும் சீனா இருக்கலாம் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இது போக சென்னையில் மஹிந்திரா சிட்டி, பின்னர் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள Sanmina, Ford, PPG Asian paints, Enfield India Limited ஆகிய நிறுவனங்களிலும் இப்படி பிரச்சனையை சீனா உருவாக்க முயல்வதாக இந்த The Wire ஊடகம் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தரப்பு, சீனாவின் தலையீடு எல்லாம் இதில் இல்லை. இது தொழிலாளர்கள் போராட்டம். சரியான இருப்பிடம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இருப்பிடம் வழங்கப்படும் என்று கூறித்தான் வேலை கொடுத்தனர்.

விளக்கம்

பின்னர் இருப்பிடம், உணவு சரியாக இல்லை என்றால் போராட்டம் நடக்கவே செய்யும். இதில் வெளிநாட்டு ஆதிக்கம் எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காகவே போராடினோம். போராட்டக்காரர்கள் ஆட்சியர் தரப்பு கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது. தங்குவதற்கு சரியான இடம், உணவு மட்டுமே தொழிலாளர்களின் கோரிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Is China behind the Chennai Foxconn workers protest? What does the intelligence report say?

Source: https://tamil.oneindia.com/news/chennai/is-china-behind-the-chennai-foxconn-protest-what-does-the-intelligence-report-say-444299.html