முக கவசம் போடாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் வசூல் – சென்னை மாநகராட்சி அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: முககவசம் அணியாத 1,022 பேரிடம் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை முக கவசம் அணியாத 2,608 பேரிடம் இருந்து ரூ.5.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலகட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அபராதங்களில் தளர்வுகள் காட்டப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஓமிக்ரான் பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் முக கவசம் மட்டுமே என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். முக கவசம் அணியாமல் மக்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினசரி பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்தாலும் மக்கள் பொது இடங்களில் அலட்சியமாகவே சுற்றித் திரிகின்றனர்.

பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம்பரபரப்பில் சென்னை.. திடீர் திடீரென கடைகளில் ஆய்வு.. மாஸ்க் அணியாதவர்களை பிடிக்க.. போலீஸ் படை தீவிரம்

அபராதம் வசூலிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு

இந்த குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாள் வசூல் ரூ.2.18 லட்சம்

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாத 1,022 பேரிடம் இருந்து ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை முக கவசம் அணியாத 2,608 பேரிடம் இருந்து ரூ.5.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Corporation Commissioner Kagandeep Singh Bedi said that a fine of Rs 2.18 lakh was levied on 1,022 non-masked persons in a single day yesterday. A fine of Rs 5.48 lakh has been levied on 2,608 persons who did not wear face shields from the 31st to the 3rd of this month.

Source: https://tamil.oneindia.com/news/chennai/rs-2-18-lakh-collected-in-one-day-from-those-who-did-not-wear-face-mask-in-chennai-corporation-444242.html