சென்னை உட்பட.. எங்கெல்லாம் ஒமிக்ரான் வேகமாக பரவுது பாருங்க! மத்திய அரசு கொடுத்த அலர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்க‌ளில் ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களால் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆயத்த நிலையில் தமிழகம்.. கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்ஆயத்த நிலையில் தமிழகம்.. கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

புத்தாண்டுக்கு முன் ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று இருந்தநிலையில், தமிழகத்தில் நேற்று முந்தினம் 2,731 பேருக்கும் நேற்று மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை தொற்றின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்திருக்கிறது.

சென்னையில் அதிகரிப்பு

சென்னையில் தினசரி பாதிப்பு தற்போது இரண்டாயிரத்தைத் தாண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் 1,489 பேருக்கும் நேற்று 2,481 பேருக்குமாக தொற்று அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் நேற்று மட்டும் ஒன்பது பேர் இறந்தனர். இதனால் கொரோனாவல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,814ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் நிறைய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

சென்னை, மும்பை, டெல்லி, கேரளா என நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப்பேசினர். கடந்த 8 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு 6.3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.

நகரங்களில் ஒமிக்ரான்

கொரோனா வைரஸின் வேரியண்ட்டான‌ ஒமைக்ரான் வகை கொரொனாவை விடவும் மிக‌ அதிகமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸைப் போல் இதன் வீரியம் குறைவாக இருந்தாலும், தீவிரமாக பரவும் தன்மை கவலைக்குரியது. ஒமிக்ரான் பரவல் குறிப்பாக நகர்ப்பகுதிகளில் வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொற்று பரவல் கவலைக்குரியதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவுநேர ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஞாயிறு முழு ஊரடங்கு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறுகையில், ”ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படும். இனிமேல் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். நகரங்களில் ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதால் அனைத்து நகரங்களிலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

English summary
The Indian government has said that the Omicron virus is spreading in cities including Chennai, Mumbai, and Delhi.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-delhi-mumbai-omicron-increasing-in-cities-central-government-alert-states-444500.html