சென்னை குரோம்பேட்டையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.யில் இன்று மேலும் 60 மாணவர்கள் உட்பட மொத்தம் 141 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 6,983 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே  குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்சில் 30 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ததோடு, கடையும் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கடை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/01/07151708/Increasing-corona-exposure-in-Chennai-Chrompet.vpf