சென்னை: முறையாக முகக்கவசம் அணிய அறிவுறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை வேப்பேரி பகுதியில் முககவசத்தை சரியாக அணியுமாறு அறிவுறுத்தியதால், வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள ஈ.வி.கே சம்பத் சாலை காவல் ஆணையரகம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் காவலர் இர்பான் பாஷா ஆகியோர் ரோந்துப் பணி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் முறையாக அணியாமல் வந்த நபரை மடக்கி நிறுத்தி முகக் கவசத்தை முறையாக அணிந்து செல்ல அறிவுறுத்தினர்.

image

Advertisement

அப்போது அந்த நபர் ” முகக்கவசம் அணிந்து வருபவரை மடக்கி வழிப்பறி செய்கிறீர்களா? ஊரடங்கில் 10 காசு சம்பாதிக்க நாய்போல் அலைகிறோம். ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்களிடம் வழிப்பறி, கந்துவட்டி செய்கிறீர்கள்” என்றவாறு கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் தொடர்ந்து முகக்கவசத்தை முறையாக அணிய மட்டுமே கூறினோம், அபராதம் விதிக்க நிறுத்தவில்லை எடுத்துரைத்தும் அந்த நபர் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

image

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதால் அந்த நபரிடம் பெயர் முகவரியைப் பெற்று போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கேட்டபோது, அந்த நபரின் பெயர் மணலி திருவள்ளூர் நகரை சேர்ந்த வினோத் கண்ணன் என்பதும், சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

ஊரடங்கின்போது காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என டி.ஜி.பி அறிவுறுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் மீது பழி சுமத்துவதற்காக இப்படியும் சிலர் விதிகளை மதிக்கக் கூறினாலும் வீண் பிரச்சனைகளில் ஈடுபடுவதாக காவல் துறையினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/126664/Chennai-person-involved-in-argument-with-the-police-who-advised-him-to-wear-a-face-mask-properly