கறார்! இந்த 7 பாயிண்ட்கள் கண்டிப்பா பின்பற்றனும்.. சென்னை போலீஸ் கமிஷனரின் ஸ்ட்ரிக்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட சரிபாதி தலைநகர் சென்னையில் தான் உள்ளது. அதேபோல பாசிட்டிவிட்டி ரேட்டும் சென்னையில் தான் மோசமாக உள்ளது.

இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங் ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO… புதிய வார்னிங்

சங்கர் ஜிவால் உத்தரவு

அதன்படி தமிழக அரசின் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த (06.01.2022) முதல் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை) மற்றும் நாளை (09.01.2022) ஞாயிறன்று முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, இரவு நேர ஊரடங்கு மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளைத் தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

10 ஆயிரம் போலீசார்

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் பொறுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு. அவர்கள் மூலம் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கண்காணித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வழிமுறைகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

1.பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி நாளை (09.01.2022) ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றக் கூடாது.

2. அத்தியாவசியப் பணிகளான ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள். பால் விநியோகம். மருத்துவமனைகள். மருத்துவ பரிசோதனைக் கூடங்கள். மருந்தகங்கள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், தினசரி பத்திரிகை விநியோகம். ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

3. அவசர மருத்துவச் சிகிச்சை, மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளைத் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முன்களப் பணியாளர்கள்

4. முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், வருவாய்த் துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அடையாள அட்டைகள் அணிந்திருக்க வேண்டும். முன் களப்பணியாளர்கள் காவல் துறையினரின் சோதனையின் போது தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

5.நோய்கட்டுப்பாடு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை.

6 .உணவகங்களில் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவு விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

ஹால்டிக்கெட் முக்கியம்

7. மேலும் நாளை (09.01.2022) ஒன்றிய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் (UPSC & TNPSC) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் நபர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) போலீசார் சோதனையின் போது காண்பித்து, தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிய வரக்கூடாது

நாளை (09.01.2022) முழு ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாமலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிச் செல்பவர்கள் மீதும் உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

தீவிர நடவடிக்கை

மேற்கண்ட கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் பணியினை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்றை தடுப்பதற்குப் பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் முன் களப்பணியாளர்கள் மற்றும் காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடச் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Shankar jiwal latest order about Sunday lockdown in Chennai. Amid, raise in Corona cases mini lockdown is implemented in tamilnadu.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-commissioner-shankar-jiwal-orders-restrictions-to-be-followed-on-sunday-lockdown-444796.html