கொரோனா: தமிழக அரசின் விதிகளை மீறிய 6 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு 5,000-ஐ கடந்து விட்டது. இதனால் சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த விவரம் அளிக்காத 6 ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 538 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 74 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இந்த தனியார் ஆஸ்பத்திரிகள், ஸ்கேன் மையங்கள், பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கொரோனா அறிகுறி உள்ளோர் குறித்த தகவல்களை பெற மாநகராட்சி சார்பில் 15 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ந்தேதி பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் 960 பேரும், ஸ்கேன் மையங்களில் 199 பேரும் என 1,159 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அந்த நபர்களை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 187 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் 57 பேரும், அடையாறு மண்டலத்தில் 23 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 21 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 15 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 பேரும் அடங்குவார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை வழங்காத 6 தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chennai Corporation has sent notices to 6 hospitals which did not provide details about those treated with corona symptoms. The incidence of corona in Chennai is doubling day by day

Source: https://tamil.oneindia.com/news/chennai/covid-19-chennai-corporation-notice-to-6-hospitals-for-violating-the-rules-444865.html