சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னை,

சென்னையில் உள்ள மின்சார ரெயில்களில் கடந்த 10-ந் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார ரெயில்களுக்கு கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் சீசன் டிக்கெட்களில் சான்றிதழ்களின் எண்களும் அச்சிடப்பட்டன. இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசி போடாமல் பயணம் மேற்கொள்கிறவர்களை கண்டறிய அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து ரெயில்வே அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் 2 தவணை தடுப்பூசி போடாத 7 ஆயிரத்து 762 பேரை மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் மட்டும் முக கவசம் அணியாதவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2022/01/15033753/Chennai-electric-trains-7762-nonvaccinated-passengers.vpf