ஓமிக்ரான் சாதாரண வைரஸ் இல்லை.. முடங்கிய பல சென்னை பத்திரிக்கையாளர்கள்! 2 ஒற்றுமைகளை கவனிச்சீங்களா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பல பத்திரிக்கையாளர்கள் வரிசையாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பலருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

ஒரு முன்னணி ஆங்கில செய்தி சேனல் சீனியர் நிருபர் அவர்.. கடந்த வாரம் தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பதை சமூக வலைதளம் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். அதே நாளில் மற்றொரு ஆங்கில இதழ் ஒன்றின் பெண் பத்திரிக்கையாளரும் தனக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இது ஜஸ்ட் தொடக்கம்தான்

'பல மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. எச்சரிக்கையாக இருங்கள்.. அச்சம் வேண்டாம்..' பிரதமர் மோடி பேச்சு‘பல மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. எச்சரிக்கையாக இருங்கள்.. அச்சம் வேண்டாம்..’ பிரதமர் மோடி பேச்சு

சென்னை பத்திரிக்கையாளர்கள்

இதன் பிறகு டிவி சேனல்கள், நாளிதழ்கள், டிஜிட்டல் ஊடகம் என பல்வேறு பிரிவு ஊடகங்களிலும் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் வரிசையாக தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை, சமூக வலைத்தளத்தின் மூலமாக அறிவித்தனர். நேற்று ஒரு மூத்த பத்திரிகையாளர் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை அறிவித்ததோடு ஓமிக்ரான் பாதிப்பை லேசில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.. கடுமையான உடல் வலி தலைவலி இருக்கிறது.. இதற்கு முன்பு இப்படி ஒரு வேதனையை அனுபவித்தது கிடையாது. எனவே மக்களே மெத்தனம் வேண்டாம் என்று பதிவு போட்டிருந்தார்.

முன்களப் பணியாளர்கள்

பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பல ஆயிரம் பேரால் ஃபாலோ செய்யப்படுகிறார்கள் என்பதால் உடனே இதுபற்றி மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாது போலீசார் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலரும் சென்னையில் நோய் தொற்றுக்கு ஆளாகி தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் களநிலவரமாக இருக்கிறது.

முதல் டோஸ் தடுப்பூசி

இதில், இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. அதில் ஒன்று, முன் களப்பணியாளர்கள் என்பதால் பத்திரிகையாளர்களும் காவல்துறையினர் உள்ளிட்டோரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஜனவரி 16ம் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவை தேர்வின் அடிப்படையில் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டது. மார்ச் 1 தொடங்கி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோயுள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது. மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்படுகிறது. தற்போது அது 15-18 வயதுக்குள்ளோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை டோஸ்

முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை டோஸ் அதாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பது மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பாக இருக்கிறது . 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் இவை செலுத்தப்படும். ஆனால், ஜனவரி 10ம் தேதிதான், முன்னெச்சரிக்கை டோஸ் போடும் பணிகள் ஆரம்பித்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் பூஸ்டர் டோஸ்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் நோய்த்தொற்று அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதோடு கடுமையான அறிகுறிகளை காட்டியிருக்கிறது.

சாதாரண சளி, காய்ச்சல் இல்லை

ஓமிக்ரானிலிருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அடுத்ததாக ஓமிக்ரான் பாதிப்பு என்பது, ஏதோ சளி மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது கிடையாது என்பது இப்போது பாதிக்கப்பட்டுள்ள பலரும் சொல்லக் கூடிய உடல் உபாதைகளிலிருந்து தெரிந்துகொள்ளும் விஷயமாக இருக்கிறது. டெல்டா வைரஸ் போலவே இதுவும் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது என்பதை பத்திரிகையாளர்களின் அனுபவம் கூறுகிறது.

Tamilnadu Lockdown: increases fine for not wearing masks | OneIndia Tamil

மக்களே உஷார்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் 85% பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவது உறுதியானதால், அதை கண்டுபிடிக்க தனியாக பரிசோதனை செய்யவில்லை என்று தெரிவித்தார். எனவே பாதிக்கப்பட்ட பல பத்திரிகையாளர்களுக்கு புதிய வகை தொற்றுத்தான் பரவி இருக்கிறது என்பதுதான் யூகமாக உள்ளது. அப்படி இருந்தும் உடல் உபாதை அதிக அளவுக்கு இருப்பது மக்கள் ஓமிக்ரானிடம் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகும். எனவே மக்களே மெத்தனம் வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். முடிந்தால் இரண்டு முகக் கவசங்கள் அணிந்து வெளி இடங்களுக்கு செல்லுங்கள். ஒரு சர்ஜரி மாஸ்க் அதற்கு மேலே துணி மாஸ்க் என டபுள் மாஸ்க் அணிந்தால் பலன் தரும். வீட்டுக்கு வந்ததும் சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடிகள் நன்கு கையைத் தேய்த்துக் கழுவவும். வாய்ப்பு இருந்தால் தலை முதல் கால் வரை தண்ணீர் படும் அளவுக்கு சோப்பு போட்டு குளிக்கவும் ஆரோக்கியமே அனைத்திலும் சிறந்தது. வரும் முன் காப்பதே வசந்த காலத்தின் அடிநாதம் என்பதை மறவாதீர்கள்.

English summary
Chennai coronavirus: Many journalists in Chennai have been affected with coronavirus’ new variant of omicron and they says body pain and headache is a common symptoms for them, and one more similarity is found that they had to take a booster vaccine yet.

Source: https://tamil.oneindia.com/news/chennai/common-symptoms-of-omicron-coronavirus-affected-journalists-in-chennai-is-worth-notable-445457.html