7 நாட்கள் தொடர்ச்சியாக அதிரடி சோதனை..17 பேர் திடீர் கைது.. எச்சரிக்கை விடும் சென்னை காவல் ஆணையர்.. – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

Tamilnádu, First Published Jan 16, 2022, 10:09 PM IST

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக கடந்த 7 நாட்களாக காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள்,துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக கடந்த 7 நாட்களாக சிறப்பு சோதனை மேற்கொண்டனர். அதில், புகையிலைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 25.4 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள், 300 கிராம் மாவா, 1 இருசக்கர வாகனம் ,1 செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.14,310 பறிமுதல் செய்யப்பட்டது. 

இதில் குறிப்பிடும்படியாக, s-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 10, 12 ஆகிய தேதிகளில் நடத்திய சோதனையில் சங்கர் நகரில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜராஜன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், எம்.டி.எம், விமல், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், எம்.டி.எம், ரெமோ, கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.12,800/-, 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், தனிப்படை காவல்துறையினர் தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 09.01.2022 முதல் 15.01.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.

Last Updated Jan 16, 2022, 10:09 PM IST

Source: https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-commissioner-press-release-r5taah