இலவசமாக பயிலும் வகையில் ஸ்வயம் இணையதளத்தில் 590 சான்றிதழ் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிவிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஸ்வயம் இணையதளத்தில் வழங்கப்படும் 590-க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளை ஆன்லைனில் இலவசமாக படிக்கலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

என்பிடிஇஎல் எனப்படும் தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சென்னை ஐஐடி உள்ளிட்ட ஐஐடி-க்கள் மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் ஸ்வயம் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் ஏராளமான படிப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றன. பொறியியல், அறிவியல், மேலாண்மை, கலை மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 593 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் வெகிக்கில்ஸ், மெஷின் லேர்னிங் பைத்தான், ஜாவா, சி, சி பிளஸ்பிளஸ், பிளாக்செயின் டெக்னாலஜி, இந்துஸ்தானி இசை என பலதரப்பட்ட படிப்புகள் இதில் அடங்கும்.

2022 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் (www.swayam.gov.in/NPTEL) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வாயிலாக இலவசமாக வழங்கப்படும் இந்த சான்றிதழ் படிப்புகளில் ஜனவரி 31-ம் தேதி வரை சேரலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் படிப்புகள் குறித்து என்பிடிஇஎல்-சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரு தங்கராஜ் கூறும்போது, ‘‘அண்மைக்காலமாக ஆன்லைன் கல்வி மிகவும்பிரபலமாகி வருகிறது. தற்போது நிலவி வரும் கரோனா சூழலில் ஆன்லைன் கல்வியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைனில் படிக்க விரும்புவோருக்கு என்பிடிஇஎல் திட்டம் ஒரு வரப்பிரசாதம்’’ என்றார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/758682-chennai-iit.html