சென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு.

சென்னை,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித்தொகுதிகளாகவும், சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழக வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் அதிகார வலிமையின் வழி மேம்படுத்தும் ஒரு சமூகநீதி அரசாக தமிழக அரசு விளங்குகிறது. இத்தகைய அறிவிப்பைச் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்தது போல, துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/01/19002424/Allotment-of-women-in-11-corporations-including-Chennai.vpf