சிங்காரச் சென்னை திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – தினமணி

சென்னைச் செய்திகள்

சிங்காரச் சென்னை திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது: திருத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொதுமக்களுக்கான சேவைகளை கணினி மயமாக்குதல், கோவளம் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால்

அமைத்தல், கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் திட்டத்தை செயல்படுத்துதல், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மூன்று முக்கியமான பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

நமக்கு நாமே திட்டம், நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிங்காரச் சென்னை திட்டம், சாலைகள் மற்றும் நடை பாதைகளை சீரமைத்தல், பட்டினப்பாக்கம் அணுகு சாலையில் நவீன மீன் அங்காடி அமைத்தல், பழுதடைந்த மழைநீா் வடிகால்களை சீரமைத்தல், வடசென்னை கடப்பாக்கம் ஏரி புனரமைப்புப் பணி, சென்னையில் உள்ள 25 நீா்நிலைகளை புனரமைத்தல், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், 10 மயான பூமிகளை மேம்படுத்துதல், வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா அரங்கை புதுப்பித்தல் மற்றும் மாநகரை பசுமையுடன் பராமரிக்க 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளையும், அரசாணை வெளியிடப்பட்டுள்ள திட்டங்களுக்கு விரைந்து ஒப்பம் கோரவும், தொடங்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jan/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3777354.html