தாம்பத்ய உரிமைக்காக.. கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் சிறையில் உள்ளார்.. இவரது கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி, அவரது மனைவி, சென்னை ஹைகோரட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதற்கு முன்பு விசாரித்தது.. இது தொடர்பாக தொடர்ந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

கருத்தரிப்பு

கருத்தரிப்பு சிகிச்சைக்காக, இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 முறையாக மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால், இது குறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, 2019 ம் ஆண்டு உத்தரவிட்டது.

கைதி

இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.. இன்று அதற்கு தீர்ப்பும் தரப்பட்டுள்ளது.. அதன்படி, தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்க முடியாது

அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்திய நீதிபதிகள், கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது என்று தன்னுடைய தீர்ப்பில் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளனர்.

சூழ்நிலைகள்

அசாதாரண காரணங்களுக்காக மட்டுமே பரோல் வழங்க விதிகள் உள்ள நிலையில், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளனர்.

English summary
Prisoners cant be granted parole for Sexual rights, Chennai HC ordered

Source: https://tamil.oneindia.com/news/chennai/prisoners-cant-be-granted-parole-for-sexual-rights-chennai-hc-ordered-446675.html