தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது… சென்னை மாநகராட்சி வெளியிட்ட நடத்தை விதிகள் முழு விபரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வாக்குகளை பெறுவதற்கான சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பொது நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக – சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 26.01.2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிகள் அமல்

வாக்குப்பதிவு 19.02.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்த நபர்கள் தகுந்த பாதுகாப்பு உடைகளை அணிந்து வாக்களிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

வெறுப்புணர்வை தூண்டக்கூடாது

தேர்தல் நடத்தை விதிகளின்படி எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள் மற்றும் சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினரிடையே நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையிலோ அல்லது ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ அல்லது கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது.

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வாக்குகளை பெறுவதற்கான சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. பிற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், அவர்களின் கடந்தகால பணி மற்றும் செயல்பாடு குறித்து இருக்க வேண்டும். கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது கட்சி தொண்டர்களின் பொது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

அச்சுறுத்தக்கூடாது

எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிநபர்களது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல் நடத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. வாக்காளர்களுக்கு எவ்வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ கொடுத்தல் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர் அல்லது அவரது ஆதரவாளர்களை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற செல்வாக்கை அவரிடம் பயன்படுத்துதல், அவருடைய வாக்குரிமையில் தலையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. போதையூட்டும் மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வழங்கப்படும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் கூடாது.

விளம்பரங்கள் எழுத தடை

அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்மந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது. பொதுக் கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒலிப்பெருக்கி எப்போது பயன்படுத்தலாம்

ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த கட்சியோ அல்லது வேட்பாளரோ தகுதியுள்ள அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள காரணத்தினால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தன்னுடன் அதிகபட்சமாக மூன்று ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

செலவு எவ்வளவு?

பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.90,000 வரை மட்டுமே செலவு செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல்களை நடத்த 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

45 பறக்கும் படை குழுக்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பணம் ரொக்கமாக மற்றும் பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும் அவற்றை பறிமுதல் செய்யவும் ஒரு மண்டலத்திற்கு மூன்று என சுழற்சி முறையில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் அல்லது வாக்காளர்களை கவரும் வகையில் அல்லது அவர்களுக்கு வழங்க ரூ.10,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் தொடர்பான புகார்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணிநேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரிய 20 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், http://election.chennaicorporation.gov.in/gcculb22/complaints/ என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பிலும் தெரிவிக்கலாம். தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Urban Local Body Election 2022: (தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள்) The Chennai Corporation has stated that no request should be made directly or indirectly to incite caste or social sentiments to get votes. It has also been advised not to campaign in places of worship, including temples, mosques and churches.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-urban-local-body-election-2022-full-details-of-the-rules-of-conduct-issued-by-the-corpor-446803.html