சென்னை ஈஞ்சம்பாக்கம் நில விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்..அரசு நிலத்தை ஆட்டைய போட்டு விற்ற 5 பேர் கைது – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் திடீர் திருப்பமாக அரசு நிலத்தை போலியாக தயாரித்து விற்றதாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக ஐ.எஸ்.சேகர் என்ற தனிநபர் ஒருவர் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன்பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் – உடனே வந்த பிடன்

நீர்நிலை ஆக்கிரமிப்பு

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் மணிசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற வந்தனர். மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தேல்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பெத்தேல்நகர் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம்

சுமார் 30 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகையும் அரசு செய்துவிட்டு தற்பொழுது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் திருப்பம்

கிழக்குக் கடற்கரை சாலையில் வசிப்பவர்கள் வெளியேற்றப்படுவதைக் கண்டித்து தொடர்ந்து போராடி வரும் நிலையில், திடீர் திருப்பமாக அரசு நிலத்தை பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 5 பேரை நீலாங்கரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறைந்தது 30 பேர் அரசு சொத்துகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் , கன்னியப்பன், ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.சோழன் , வெங்கடேசன், ஈஞ்சம்பாக்கம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சோழிங்கநல்லூர் தாசில்தார் மணிசேகர் புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

அவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஈஞ்சம்பாக்கம் நில மோசடியில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகிவதாகவும், பலர் அவர்களிடம் பணம் கொடுத்து சட்ட விரோதமாக தங்கள் பெயரில் மனைகளை பதிவு செய்துள்ளனர் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுப்படி தொடரும் என கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் 164 ஏக்கர் சதுப்பு நிலத்தை மீட்கத் தொடங்கியுள்ளனர்.

English summary
Police have arrested 5 people for forging and selling government land in a sudden turn in the process of removing the encroachments in Chennai Inchambakkam.

Source: https://tamil.oneindia.com/news/chennai/police-have-arrested-5-people-for-selling-government-land-in-chennai-injambakkam-446943.html