”மெட்ராஸ் ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு.. போராட்டம் நடத்துவேன்.. மோடிக்கு முன்னாள் பேராசிரியர் கடிதம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மெட்ராஸ் ஐஐடி கல்வி நிலையத்தில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என மெட்ராஸ் ஐஐடி முன்னாள் பேராசிரியர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. குறிப்பாக மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுச் செல்வதும் அதிகரித்தது.

நீதிமன்றமும் மெட்ராஸ் ஐஐடி நிர்வாகத்தை இதற்காக எச்சரித்தது. இந்தியாவில் உள்ள‌ பல ஐஐடி-களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த ஜாதி, மதப் பாகுபாடுகள், பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் ஐஐடி மெட்ராஸில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தந்தை லத்தீப்சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தந்தை லத்தீப்

பேராசிரியர்

இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்வி நிலையங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு, ஜூலையில் மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் ஒருவர் ஜாதி பாகுபாடு நிலவுவதாக சொல்லி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

விபின் பாட்டீல்

ஐஐடி மெட்ராஸில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியில் துறையில் 2019-ம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவந்தவர் விபின் பி வீட்டில். ”நான் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து என்னுடைய துறையில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளை அதிகமாக அனுபவித்துவருகிறேன். இத்தகைய பாகுபாடுகளுக்கு உயரதிகாரத்தில் இருக்கும் சில தனி நபர்கள்தான் காரணம். ஐஐடி-யில் ஜாதிப் பாகுபாடு தொடர்பான தனிநபர்களின் வழக்குகளை கவனித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும் அந்தக் குழுவில், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் இடம்பெற்றிருக்க இருக்க வேண்டும்” என்று கூறி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஐஐடி நிர்வாகத்துக்கு அனுப்பி இருந்தார் விபின்.

பிரதமருக்கு கடிதம்

இந்நிலையில், மெட்ராஸ் ஐஐடி கல்வி நிலையத்தில் இன்னும் ஜாதியப் பாகுபாடு நிலவுவதாகவும், அதைத் தடுக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுப்பேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் விபின் பி வீட்டில். அந்தக் கடிதத்தில், ”நான் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தவன். சென்னை ஐ.ஐ.டி.யில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்களால் நான் ஜாதியப் பாகுபாடு காட்டப்பட்டு தொல்லைகளுக்கு ஆளானேன். இதுதொடர்பாக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்திருந்தேன். இதையடுத்து, என்.சி.பி.சி. விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகும் எனக்கு துன்புறுத்தல் தொடர்ந்தது.

பதவிவிலக வேண்டும்

என்.சி.பி.சி மூலமாக என்னுடைய வழக்கை விசாரிக்க விரும்பியே நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். துறைத்தலைவர் ஜோதிர்மயா திரிபாதி என்.சி.பி.சி. தனது விசாரணையை முடிக்கும் வரை பதவி விலக வேண்டும், நிர்வாகக்குழுவில் இருந்து முரளிதரன் விசாரணை முடியும் வரை பதவி விலக வேண்டும், இவர்கள் இருவரும் என்னிடமும், பிற பிராமணரல்லாத ஆசிரியர்களிடமும் நடந்து கொண்ட விதத்தை பற்றி விசாரணை செய்த பிறகே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

உண்ணாவிரதம்

தற்போது நடைபெற்று வரும் எஸ்.சி./எஸ்.டி./ ஓ.பி.சி. பிரிவு ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு பணியில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையடங்கிய கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி இருக்கிறார் விபின். தன்னுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால் பிப்ரவரி 24ம் தேதி மெட்ராஸ் ஐஐடி வாசல் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று விபின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
The former IIT professor Vipin P Veetil has written a letter to the Prime Minister saying that caste discrimination exists at the IIT Chennai and if he does not take action, he will go on a hunger strike.

Source: https://tamil.oneindia.com/news/chennai/former-professor-writes-letter-to-pm-narendra-modi-over-caste-discrimination-in-madras-iit-447738.html