சென்னையில் 1100 பதட்டமான வாக்குச்சாவடிகளில் நேரடி வீடியோ பதிவு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் வாக்காளர்கள் வசதிக்காக 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 3,303 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேட்சைகளும் அதிகளவில் களத்தில் உள்ளனர்.

தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், கமி‌ஷனருமான ககன்தீப்சிங் பேடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 லட்சத்து 78 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் இத்தேர்தல் நடைபெறுவதால் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வாக்காளர்கள் வசதிக்காக 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என 182 அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இந்த பணி தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்கும் வகையில் வீடியோ பொருத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து பதட்டமான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடம், வாக்காளர்கள் வரிசையில் வரும் பகுதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளை உள்ளடக்கி நேரடி வீடியோ கேமராக்கள் பொருத்தப்படுகிறது என்று கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளில் எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காத வகையில் சிறப்பு ஏற்பாடாக நேரடியாக வீடியோ மூலம் பார்க்கக்கூடிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதவிர 400 நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்வார்கள். தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2022/02/10104219/3469996/Tamil-News-Live-video-recording-1100-tense-polling.vpf