சென்னை மாநகரில் கால்நடைகளுக்கு தடை விதிக்க விரைவில் உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், மாநகராட்சிப் பகுதிகளில் கால்நடைகளுக்குத் தடை விதிக்கும் விதிகள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவா்த்தி ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘சென்னையில் தெருநாய்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகள் சுதந்திரமாக  சுற்றித் திரிகின்றன. போக்குவரத்து மிகுந்த மெரீனா கடற்கரை முன்புள்ள காமராஜா் சாலையிலும் ஏராளமான கால்நடைகள் கடந்து செல்வதை பாா்க்க முடிகிறது. மாநகராட்சிக்கு வெளியில் தான் கால்நடைகள் இருக்க வேண்டும்.  மாநகருக்குள் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ’ என்று சென்னை மாநகராட்சி தரப்புக்கு  கேள்வி எழுப்பினா்.

அதற்கு மாநகராட்சி தரப்பு வழக்குரைஞா், ‘சாலையில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள்  பிடித்து அதன் உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலிக்கின்றனா். மீண்டும் சாலையில் விடமாட்டோம் என உத்தரவாதம் பெற்ற பின்னா்தான்,  அவா்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்படுகின்றன. பன்றிகளுக்கு  மட்டுமே மாநகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளித்தாா்.

அதற்கு நீதிபதிகள், ‘சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா? மாநகராட்சிப் பகுதிகளில் கால்நடைகளுக்கு தடைவிதிக்கும் விதிகள் எதுவும் இல்லையா? அப்படி இல்லை என்றால், அதற்கான உத்தரவை இந்த உயா்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்கும்’ என கருத்து தெரிவித்து, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/feb/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3789536.html