சென்னை ரிப்பன் மாளிகையில் மேயராக அமரப்போவது யார்? – அதிமுக – திமுக இடையே கடும் பலப்பரிட்சை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 85 சதவிகித வார்டுகளில் ஆளும் கட்சியான திமுக எதிர்க்கட்சியான அதிமுகவும் நேராடியாக மோதுகின்றன. அதிக இடங்களில் வென்று மேயராக அமர வேண்டும் என்பதற்காக திமுகவும் அதிமுகவும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். ரிப்பன் மாளிகையின் முதல் பெண் மேயராக எந்த கட்சி வேட்பாளர் அமரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

உதயநிதி சொன்ன நீட் தேர்வு ரகசியம் என்ன தெரியுமா? கையில் என்ன கருப்பா? கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலகலஉதயநிதி சொன்ன நீட் தேர்வு ரகசியம் என்ன தெரியுமா? கையில் என்ன கருப்பா? கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலகல

மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு திமுக மற்றும் அதிமுகவில் யார் மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.

8 முனைப்போட்டி

சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி,பாமக., பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடையே 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் முற்றுகையிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

2011 உள்ளாட்சித் தேர்தல்

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடைசியாக 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்கள் பல வார்டுகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றனர். குறைந்த பட்சம் 100 வாக்குகள் கூட வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்தது. அதே போல திமுக வேட்பாளர்களும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை நிர்ணயிக்கப் போகிறது.

குறைந்த வாக்கு வித்தியாசம்

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் 40 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிக்கனியை எட்டினர். அந்த தேர்தலின் போது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பாமகவும் தேமுதிகவும் கணிசமான வாக்குகளை குவித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த முறை பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகள் வாக்குகளை பிரிக்க உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரும் களத்தில் உள்ளனர். இவர்களது வாக்குகளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி தேர்தல் பிரசாரமும், கள நிலவரமும் உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சுமார் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்காளர்கள் உள்ளனர். சராசரியாக பார்த்தால் ஒவ்வொரு வார்டிலும் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சம் 20ஆயிரம் பேர் வாக்களித்தாலும் 8 கட்சிகளுக்கு பிரிந்து வாக்கு அளிப்பார்கள். கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்த பட்சம் 5 ஆயிரம் வாக்குகளை பெற்றால்கூட போதும். எளிதாக கவுன்சிலர் ஆகிவிட முடியும். ஆனால் அந்த குறைந்தபட்ச 5 ஆயிரம் வாக்குகளை பெற முடியுமா? என்பதுதான் வாக்குகள் சிதறுவதை பொறுத்து அமையும். தற்போது 8 முனைப்போட்டி உள்ளதால் வாக்குகள் கணிசமாக சிதற வாய்ப்பு உருவாகி உள்ளது. இது திமுக கூட்டணி வேட்பாளர்களிடையேயும், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக திமுக இடையே கடும் போட்டி

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் அதிமுக திமுக கடும் போட்டி நிலவுகிறது. வாக்குகள் சிதறும் நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்களும் வெற்றியை கருத்தில் கொண்டு தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனி நபர் செல்வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கட்சி, வேட்பாளரின் தகுதியும் பிரசார யுக்தியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பலமான வேட்பாளர்கள்

சுயேச்சைகளும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை கொடுக்க உள்ளனர். சில வார்டுகளில் அதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக திமுகவில் பலம் வாய்ந்த வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். திமுகவில் சிற்றரசு, முன்னாள் அமைச்சர் இளம் வழுதியின் மகன் இளைய அருணா, சிற்றரசு மற்றும் இளம்சுருதியையும் அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ வி. அலேக்சாண்டர் அதிமுக ஆதரவு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் சிவகாமி என பெருந்தலைகள் களம் காண்கின்றனர்.

சட்டசபைத் தேர்தல் வாக்குகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இருந்தாலும், சிறிய கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு தோல்வியை கொடுத்தது. 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தகுந்த அளவு வாக்குகளை பெற்றது. அதே போல, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்று அதிமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

மேயராக அமரப்போவது யார்?

உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் முன்னிறுத்தப்படும் என்பதால் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் பெரும்பாலான வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. அதிக வார்டுகளில் வெற்றி பெற்று ரிப்பன் மாளிகையில் மேயராக மார்ச் 4ஆம் தேதி அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

English summary
TN Local body election Chennai mayor: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: In the urban local body elections in Tamil Nadu, the ruling DMK-opposition AIADMK is directly competing in 85 per cent of the total 200 wards in the Metropolitan Corporation of Chennai. The DMK and AIADMK have been campaigning to win more seats and become mayor. Expectations have risen as to which party candidate will run for the first female mayor of the Ribbon House.

Source: https://tamil.oneindia.com/news/chennai/who-will-be-the-mayor-of-chennai-ribbon-house-aiadmk-dmk-is-a-fierce-rivalry-448285.html