பெரிய மாற்றத்திற்கான தொடக்கம்.. முதல் பட்டியலின பெண் மேயரை தேர்ந்தெடுக்கும் சென்னை.. ஏன் முக்கியம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நாட்டிலேயே மிகவும் பழமையான மாநகராட்சிகளில் ஒன்றான சென்னை, முதல்முறையாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் தனது மேயராக தேர்ந்தெடுக்க உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு - ஆளுநர், முதல்வர் வாழ்த்துசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு – ஆளுநர், முதல்வர் வாழ்த்து

மகளீர்

தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 50% பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது.

திருமா கோரிக்கை

அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதி வரையறை பணிகள் நடைபெற்ற வந்த போதே விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியைப் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னையின் ஆதிக்குடிகள் நகரை விட்டே விரட்டியடிக்கப்படுவது தொடர்ந்து வருவதாகவும் அத்தகையப் பூர்வக்குடிகளின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் வகையில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியையும் அவர் நேரில் சென்று வலியுறுத்தினர்.

பட்டியலின பெண்கள்

இந்தச் சூழலில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, வெளியான தொகுதி வரையறை அறிவிப்பில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, மற்றும் ஆவடி மாநகராட்சியும் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல், காஞ்சிபுரம், கடலூர், கரூர், வேலூர், சிவகாசி, மதுரை, ஈரோடு மற்றும் கோவை மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கியம்

இதில் சென்னை மாநகராட்சி மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டின் தலைநகராகவும் நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னையின் மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு வருவது பல மாற்றங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக அமையலாம். ஏனென்றால் சென்னை மேயர் என்பது மிகவும் முக்கியமான ஒரு பதவி ஆகும். இன்றைய முதல்வர் ஸ்டாலின், மருத்துவத் துறை அமைச்சர் மா.சு. ஆகியோர் இதற்கு முன்பு சென்னை மேயராக இருந்தவர்கள் தான்.

ஸ்டாலின்

திமுக மூத்த தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் தான் 1996இவ் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தலை அறிமுகப்படுத்தினார் அந்த ஆண்டில் தான் தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையில் நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேயராக இருந்த போது மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை இப்போதும் கூட அக்கட்சியினர் நினைவு கூர்கின்றனர்.

தேர்தல் முறை

அதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்ட போது, இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி அமைந்ததும், உள்ளாட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்பு 5 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலை நடத்த அதிமுக முடிவு எடுத்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2016இல் முடிந்த போதிலும், அதிமுக தேர்தலை நடத்தவில்லை,

நேரடி போட்டி

பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் இப்போது தேர்தல் நடைபெறும் நிலையில், மொத்தம் 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகிறது. எனவே, சென்னையில் இரு கட்சிகளில் யாருக்குச் செல்வாக்கு இப்போது அதிகமாக உள்ளதோ அவர்கள் மேயர் பதவியைக் கைப்பற்றுவார்கள். கட்சி வாரியாக பார்க்கும் போது, திமுக 165 வார்டுகளிலும் அதிமுக 170க்கும் மேற்பட் வார்டுகளிலும் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதர வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த கால பெண்கள்

அதேநேரம் சென்னை மநகராட்சிக்கு பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறை இல்லை. ஏற்கனவே, 1957இல் தாரா செரியன், 1971ஆம் ஆண்டில் காமாட்சி ஜெயராமன் என இரண்டு பெண் மேயர்கள் சென்னைக்கு இருந்துள்ளனர். இருப்பினும், இந்த முறை சென்னை மாநகராட்சி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகக் கூட இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

English summary
Chennai corporation mayor post is allocated for dalith woman in urban local body election: Tamilnadu urban local body election latest in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-is-to-elect-first-ever-dalit-woman-mayor-448857.html