சென்னை புத்தகக் கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் இளைஞர்களின் படைப்புகள் – BBC Tamil

சென்னைச் செய்திகள்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தமிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளிலேயே, சென்னை புத்தகக் கண்காட்சி மிகவும் பெரியது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை தினங்களை ஒட்டி இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை, ஜனவரி மாதத்தில் கண்காட்சியை நடத்த அரங்குகள் எல்லாம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாக்கப்படவே, கண்காட்சி நடப்பது தள்ளிப்போடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், இந்த மாதம் 16ஆம் தேதி முதல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு, துவக்கத்திலேயே ஜனவரியில் புத்தகக் கண்காட்சி நடக்காது என்பது தெரிந்துவிட்டதால், புதிய புத்தகங்களின் வரவு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால், இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் பலரும் டிசம்பர் இறுதியிலேயே புத்தக வெளியீட்டிற்கான முயற்சிகளில் இருந்தனர்.

இந்த நிலையில் கண்காட்சி தள்ளிப்போனது பல பதிப்பாளர்களையும் பபாசியையும் திகைக்க வைத்தாலும், இந்த ஆண்டு விற்பனை கைகொடுக்குமென நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 790 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும். இந்த ஆண்டு, ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் 2,750 ரூபாய் விலையில் வெளியாகியிருக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘மிஸ் யூ’ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதேபோல, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிறுகதைத் தொகுப்புகளும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இளைஞர்கள் வெளியிட்டுள்ள தொகுப்புகள். கவிதைகளில் கவனம் செலுத்திவந்த முத்துராசா குமாரின் ‘ஈத்து’, கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ஒளிரும் பச்சைக் கண்கள், பெருந்தேவியின் ‘கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?’, கே.என். செந்திலின் ‘விருந்து’ ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.

நாவல்களைப் பொறுத்தவரை, இமயத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’, கரண்கார்க்கியின் சட்டைக்காரி ஆகியவை பரபரப்புடன் பேசப்பட்டுவருகின்றன.

புனைவல்லாத எழுத்துகளைப் பொறுத்தவரை, எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் நூல்களின் எண்ணிக்கையும் தேர்வும் வாசகர்களை ஈர்க்கிறது.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புனைவல்லாத படைப்புகள் என எந்தவிதமான புத்தகங்கள் அதிகம் வருகின்றன, அதிகம் விற்கின்றன? “இதை அறிய பல ஆண்டுகள் முயற்சித்திருக்கிறோம். ஆனால், பதில் கிடைத்ததில்லை. ஒவ்வொரு பதிப்பாளரும் தங்கள் பதிப்பகம் சார்ந்தே தகவல்களைத் தெரிவிப்பார்கள். தற்போது நிறைய புனைவுகள் வருகின்றன. ஆங்கிலத்தில் வரும் பல நூல்கள் தற்போது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகின்றன. தன் முனைப்புப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகம் விற்கின்றன. பெரியார் தொடர்பான புத்தகங்களும் தொடர்ச்சியாக விற்றுவருகின்றன” என்கிறார் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒளிவண்ணன்.

புத்தகம்

பட மூலாதாரம், Getty Images

43வது புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி தொடர்பான கண்காட்சி இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பொருநை நதி நாகரீகம் தொடர்பான கண்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதே அரங்கில் மெய்நிகர் முறையில் தொல்லியல் பொருட்களை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், அதையும் வரிசையில் நின்று ரசித்து வருகிறார்கள் வாசகர்கள்.

இந்த புத்தகக் கண்காட்சியை பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் நடத்துகிறது. ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கும் முன்பாக, உறுப்பினர்கள் அல்லாத பதிப்பாளர்களிடமும் விற்பனையாளர்களிடமும் அரங்குகளைப் பெறுவதற்கு போட்டி நிலவும். புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதும் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. “ஆனால், கடந்த ஆண்டு புதிதாக 80 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டிலிருந்து அதுபோல போட்டிகள் ஏதும் இல்லை” என்கிறார் ஒளிவண்ணன்.

வேறு மொழியில் பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் பதிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பினாலும், இடமின்மை காரணமாக அது சாத்தியப்படுவதில்லை என்கிறார் அவர். எவ்வளவு முயன்றாலும் 800 கடைகளுக்கு மேல் இந்தக் கண்காட்சியில் அமைக்க முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.

கண்காட்சியின் துவக்க நாட்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாசகர்கள் வராததால், பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சற்று சோர்வடைந்திருந்தனர். ஆனால், வெள்ளிக்கிழமையன்று மாலை நான்கு மணியளவிலேயே வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/arts-and-culture-60442637