அன்று கட்சியில் அவமானம்! இன்று மக்கள் தந்த வெகுமானம்! சென்னை மாநகராட்சியில் 2 சுயேச்சைகள் வெற்றி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி 2-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கோமதி கணேஷ் என்பவரும், 23-வது வார்டில் சுயேச்சையாக களம் கண்ட ராஜன் என்பவரும் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இங்க பாருங்க.. சாயல்குடி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி! மலைத்துப்போன பெரிய கட்சிகள்இங்க பாருங்க.. சாயல்குடி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி! மலைத்துப்போன பெரிய கட்சிகள்

இவர்கள் இருவரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற போதும் அவர்களுக்கு சீட் வழங்கப்படாததால் தனித்து களம் கண்டு தாங்கள் யார் தங்களின் பலம் என்ன என்பதை கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு நிரூபித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி’

சென்னை மாநகராட்சியில் அதிக வார்டுகளை கைப்பற்றி திமுக வெற்றிமுகத்தில் உள்ள நிலையில், 2 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். திமுகவை சேர்ந்த கோமதி கணேஷ் என்பவர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கேட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் மறுத்த காரணத்தால், தனித்து சுயேச்சையாக போட்டியிட்டு இன்று கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார். இதனிடையே இவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி

இதேபோல் சென்னை மாநகராட்சியின் 23-வது வார்டில் ராஜன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு திமுக கூட்டணியில் வார்டு கொடுக்கப்படாததால் தனித்து களம் இறங்கி தனது மக்கள் செல்வாக்கை கட்சித் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகிக்கும் நிரூபித்துள்ளார். இவரும் தனது ஆதரவை திமுகவுக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுயேச்சைகள்

இவர்களை போலவே தமிழகம் முழுவதும் கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் தமிழகம் தழுவிய அளவில் பரவலாக வெற்றி பெற்றிருக்கின்றனர். மிகவும் இழுபறியான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மட்டும் சுயேச்சைகளின் ஆதரவு கட்சிகளுக்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களின் ஆதரவை பொறுத்தே அந்த நகராட்சியை திமுகவோ, அதிமுகவோ கைப்பற்ற முடியும்.

மக்கள் செல்வாக்கு

தலைநகர் சென்னையை பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, சுயேச்சையாக களமிறங்கி தங்களின் பலத்தை நிரூபித்து தாங்கள் யார் எனக் காட்டிய சென்னை மாநகராட்சியின் 2 சுயேச்சை கவுன்சிலர்களுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

English summary
2 Independents Candidates win in Chennai Corporation

Source: https://tamil.oneindia.com/news/chennai/2-independents-candidates-win-in-chennai-corporation-449639.html