சென்னை பெண் மேயர் பதவி யாருக்கு? திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பெண்களாக உள்ளனர். இந்நிலையில் சென்னை மேயர் பதவியானது, பட்டியல் இன பெண்ணுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற கேள்வி எழுந்துள்ளது.

திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற 23 வயதான பிரியா ராஜன், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீதனு சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 23 வயதான பிரியா ராஜன் எம்.காம் முதுநிலை பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதேபோல, ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 111 வது வார்டில் இருந்து தேர்வான நந்தினி என்பவரின் பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உள்ளார். முதலமைச்சரின் தொகுதியில் வசிக்கும் இவருக்கு, திருமணமாகி குழந்தை இருக்கிறது.

திமுகவை பொறுத்தவரையில், வடசென்னை பகுதியில் இதுவரை யாரும் மேயராக இருந்ததில்லை. அதனால் இம்முறை வட சென்னையை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஏற்கெனவே சென்னையில் மேயர்களாக இருந்த மா.சுப்பிரமணியன் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்,  மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியலை அனுப்பியவுடன், வேட்பாளர்களை இறுதிசெய்து முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவிப்பார் என கூறப்படுகிறது.

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/02/23101737/Who-is-the-new-Mayor-of-Chennai.vpf