சென்னை விமான நிலைய புதிய முனையம்; பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன? – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னை விமான நிலையம்; அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாக பயணிகள் கவலை; இதற்கு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய முனையம் தீர்வாகுமா?

Chennai Airport new terminal facility details: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான நடைமுறைகள் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதாக, விமானப் பயணிகள் கவலை தெரிவித்து வரும் நிலையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்று கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் அல்லது இங்கிருந்து புறப்படும் சர்வதேச பயணிகளுக்கு, விமானங்களில் ஏறும் முன் மற்றும் இறங்கும் செய்யப்படும் நடைமுறைகள் வழக்கமாக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால், கூட்ட நெரிசல் காரணமாக காத்திருப்பு நேரத்தைக் கண்டு பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால், புதிய ஒருங்கிணைந்த முனையம், அதிக குடிவரவு (இமிக்ரேஷன்) கவுண்டர்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைக் கொண்டிருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், இந்த நிலை விரைவில் சிறப்பாக மாறக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய முனையத்தில் குடிவரவு கவுண்டர்களின் எண்ணிக்கை தற்போதைய 12ல் இருந்து 54 ஆக உயர்த்தப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரிகள் தெரிவித்தனர், இதனால், பயணிகள் போக்குவரத்து அதிகரித்தாலும், கூட்டத்தை திறமையாக நிர்வகிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், பாதுகாப்பு நடைமுறைகளை முடிக்க பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய கட்டிடத்தில் கிட்டத்தட்ட 10 கவுண்டர்கள் இருந்தாலும், புதியது 20 கூடுதல் அம்சங்களுடன், செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

இதையும் படியுங்கள்: வி.சி.க, முஸ்லிம் லீக், பா.ஜ.க, கம்யூனிஸ்ட்… முரண்பட்ட கட்சிகளின் சங்கமம் ஆகும் சென்னை மாநகராட்சி!

ஆனால், கட்டட வசதிகள் மட்டும் போதாது என்றும், புதிய கவுன்டர்களுக்கு பணியாளர்களை நியமிக்காவிட்டால், கூட்ட நெரிசல் தொடரும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய அதிகாரிகள் ஏற்கனவே குடிவரவு மேசைகளில் ஆள் பற்றாக்குறை உள்ளதாக எடுத்துரைத்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட சர்வதேச பயணிகளின் வருகை குறைவாக இருந்தாலும், அது எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள், போக்குவரத்தை சிறப்பாகக் கையாளும் வகையில் விமானநிலையம் பொருத்தப்பட வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (U.A.E.) செல்லும் பயணிகள் விமான நிலையத்தில் ஏறுவதற்கு முன் RT-PCR சோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை என சென்னை விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விரைவான PCR சோதனை செய்வது திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளது.

முன்னர், U.A.E க்கு பயணம் செய்யும் பயணிகள் ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளைப் பெறும் வகையில், 2,900 ரூபாய் செலவில் விமான நிலையத்திற்கு வந்தவுடன் RT-PCR சோதனையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-airport-new-terminal-facility-details-416113/