சூப்பர் தேர்வு.. சென்னை மேயராகிறார் 28 வயதே ஆன திமுகவின் பிரியா? ஸ்டாலின் சாய்ஸ்.. யார் இவர்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் நாளை தேர்வு செய்யப்படுகிறார். நாளை மறைமுக தேர்தல் நடக்கும் நிலையில் இன்று மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது. அதாவது மேயர், துணை மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இந்த மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.

நேற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் எல்லோரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து நாளை தேர்தல் நடக்க உள்ளது .

திமுக வெற்றி

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தனியாக வென்று திமுக பெரும்பான்மை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.

சென்னை மேயர்

இந்த நிலையில் சென்னை மேயராக திமுக யாரை தேர்வு செய்யும் என்ற கேள்விகள், விவாதங்கள் எழுந்து வந்தன. முன்னதாக சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பதவியில் திமுகவை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் மட்டுமே பதவி ஏற்க முடியும். சென்னையில் வென்ற 153 பேரில் ஆண்கள் தவிர்த்து மீதம் உள்ள பெண்களில் தலித் பிரிவினரை மட்டும் கணக்கில் கொண்டால் 13 பேர் இருக்கிறார்கள். இந்த 13 பேரில் ஒரு பெண்ணுக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும்.

பலர் போட்டி

இந்த பதவியை பெற பலரிடையே போட்டி நிலவியது. முக்கியமாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆதவாளர்கள் இடையே போட்டி நிலவியது. இந்த நிலையில், சென்னையின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர் மறைமுக தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை இன்று திமுக வெளியிட்டது. இவருக்கு வயது 28 தான் ஆகிறது.

யார் இவர்?

வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் நெருக்கம் ஆனவர். அவர் மாவட்ட செயலராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர், அதேபோல் முதன் முறையாக வடசென்னையை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி தீவிரம்

முன்னதாக இந்த பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இந்த பதவியை கைப்பற்ற வி.வி.ஐ.பி.க்கள் பலரும் முட்டி மோதி வந்தனர். சென்னையின் இரண்டாவது பெண் மேயர் யார் என்பது மிகவும் கவுரவமான பொறுப்பு. அதோடு பவர் புல் பதவியும் கூட. மேலும் முதல்வர் ஸ்டாலின் ஒரு காலத்தில் அலங்கரித்த பொறுப்பு. இதெல்லாம் போக சிங்கார சென்னை 2.0 திட்டம் வருவதால் இந்த பதவியை அலங்கரிக்க போகும் நபர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கடுமையான ரேஸ்

இந்த ரேஸில் 3 பேர் இருந்தனர். திமுக சார்பாக 159வது வார்டில் வெற்றபெற்ற மு.ஆ.நந்தினி, 100-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியா ஆகியோருக்கு மேயர் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. கடைசியில் 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியாவை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மகள்தான் ப்ரியா. பல ஆலோசனைகளை செய்துவிட்டு கடைசியில் இவரை மேயராக்க ஸ்டாலின் டிக் அடித்துள்ளார்.

பெண் மேயர்

28 வயதான பிரியா சென்னை மேயராக பட்சத்தில் சென்னையின் இளமையான மேயர் இவர்தான் என்ற சிறப்பை பெறுவார். அதே போல இவர் சென்னையின் இரண்டாவது பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. 340 சென்னை மேயர் வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்த பதவியை பெண் அலங்கரிக்கிறார். இதற்கு முன் 1971-72 காலகட்டத்தில் திமுக சார்பாக காமாட்சி ஜெயராமன் இங்கு பெண் மேயராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Local body election: 28 Year Old Priya from DMK may become the new Chennai Mayor .

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-local-body-election-28-year-old-priya-may-become-the-new-chennai-mayor-450558.html