சென்னை நகரை நள்ளிரவில் சுத்தம் செய்யும் பெண்கள் வாழ்க்கை: பணி பாதுகாப்பு இல்லை, குறைந்த ஊதியம் – BBC Tamil

சென்னைச் செய்திகள்
  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழுக்காக

நீலம் மற்றும் மஞ்சள் உடைகளை அணிந்துகொண்டு, சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க இரவு முழுவதும் உழைக்கும் பெண்களை கவனித்திருக்கிறீர்களா?

சென்னை மாநகரம் களைத்துப்போய் உறங்க செல்லும் இருள் கவிழ்ந்த 12 மணிக்குத்தான் அவர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். மஞ்சளும் வெள்ளையும் கலந்த சாலை விளக்குகளே அப்பெண்கள் வேலை செய்வதற்கான அதிகபட்ச பாதுகாப்பாக இருக்கிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. கே.கே.நகரின் பிரதானமான சாலையொன்றில் 7-8 பெண்கள் இருவராக பிரிந்து, நீளமான துடைப்பங்களை நீளவாக்கில் நீட்டி, சாலைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.

ஒருவர் சாலையை சுத்தம் செய்து குப்பைகளை ஓரிடத்தில் குவிக்க, மற்றொரு பெண் அதனை வாரி எடுத்து, சிறிய பெட்டி ஒன்றில் சேகரிக்கிறார். அந்த பெட்டி நிறைந்ததும், வண்டி ஒன்றில் அதனை கொட்டுகின்றனர். நீண்ட மூங்கில் குச்சியில் செருகப்பட்ட துடைப்பத்தை, தலைகீழாக திருப்பி சாலையின் இடுக்குகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்கின்றனர். பின்னர், அந்த குச்சி பகுதியை கையில் பிடித்தே சாலையை சுத்தம் செய்கின்றனர். ஆண்கள் இந்த பணியில் ஈடுபட்டாலும், பெரும்பாலும் பெண்களே உள்ளனர்.

நள்ளிரவில் பெரிதாக ஓய்வுநேரம் ஏதுமின்றி இப்பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் தூய்மைப் பணியாளர்களின் இரவு எப்படி கழிகிறது? அவர்களுக்கான பணி பாதுகாப்பு எப்படி இருக்கிறது? இரவு அவர்களை அச்சுறுத்தவில்லையா?

சென்னையில் முக்கியமான சாலைகள் சிலவற்றில், இரவு 12 மணியை கடந்திருந்த வேளையில், தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்த சில பெண்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.

கே.கே.நகரில் நீளம், அகலம் என இருவிதத்திலும் பெரிதான சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த 40 வயதைக் கடந்த இந்திராணி பேசினார். அவருடன் சேர்ந்து 7-8 பேர் சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.

தூய்மைப் பணியாளர்

சென்னை திருமழிசையைச் சேர்ந்த இந்திராணி, சில ஆண்டுகளுக்கு முன்பே மணவிலக்கு பெற்றவர்.

“இரவு 9 மணிக்குக் கையில் துடைப்பத்தை எடுப்போம். இந்த சாலையின் பாதிவரை சுத்தம் செய்ய 1-1.30 ஆகிவிடும். முழுவதையும் முடிக்க காலை 5.30 மணி ஆகும்” என்கிறார் இந்திராணி.

“வாரம் ஒரு நாள் விடுப்பு கிடைக்கும்” என்றார் இந்திராணி.

காவல் இருக்கும் நாய்கள்:

அவர் பேசுகையில் சாலையில் நாய்கள் சில குரைத்துக்கொண்டிருந்தன. நள்ளிரவில் சாலைகளில் புதிதாக நடமாடுபவர்களுக்கு நிச்சயம் குலைநடுங்கச்செய்வதாக இருக்கும் அந்த காட்சி.

தூய்மைப் பணியாளர்

ஆனால், இந்திராணியிடம், “நாய்களை பார்த்தால் பயமில்லையா உங்களுக்கு?” என்று கேட்டால், “ஒன்றும் செய்யாது. எங்களுக்குப் பழகிவிட்டது. எங்களின் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் (நாய்கள்) இருக்கின்றனர்” என்கிறார்.

இவர்களின் வேலை நிரந்தரம் அல்ல. தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இவர்கள் உள்ளனர்.

மாதச் சம்பளம் ரூ.10,500. பிஎஃப் உள்ளிட்ட பிடித்தம் போக ரூ.9,500 அளவில் அப்பெண்களுக்கு இதில் வருமானம் கிடைக்கிறது.

ஒற்றைப் பெண்களுக்கான வாழ்வாதாரம்:

மேற்கு மாம்பலம் பகுதியில் சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த ராதா, ருக்மணி என்ற இரண்டு பெண்களிடம் பேசினேன்.

தூய்மைப் பணியாளர்

ராதா – ருக்மணி பெயர் ஒற்றுமையை கேட்டால் இருவரும் சிரிக்கின்றனர். ராதா, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர். ஊட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், திருமணத்திற்குப் பின் சென்னை வந்து 22 ஆண்டுகளாகின்றன. கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

“என்னுடைய இருமகள்களும் 16 வயதிலேயே காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். பெரியவளுக்கு 2 குழந்தைகள், சிறியவளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றனர். மூத்த மகளின் கணவர் சரியில்லை. மூத்த மகள் என்னுடன் தான் இரு மகள்களுடன் இருக்கிறார். அவர்களை நான் தான் பார்த்துக்கொள்கிறேன். அதற்கு இந்த வேலையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் செய்துதான் ஆக வேண்டும்” என்றார், ராதா.

வாடகை வீட்டில் வசிக்கும் ராதா சம்பாதிக்கும் பணத்தில் வாடகை, மின்சாரத்துக்கு ரூ. 5,000 செலவாகிவிடுகிறது என்கிறார்.

எண்ணூரை சேர்ந்த ருக்மணி தினந்தோறும் இரவில் ரயிலில் பயணித்து வேலைக்கு வருகிறார்.

“என்னுடைய கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதில், வருமானம் இல்லை. கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் மோசமான நிலைமை. கடந்த ஓராண்டாகத்தான் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறேன். என்னுடைய மகன் கல்லூரியில் படித்து வருகிறான். மகள் 7ம் வகுப்புப் படித்துவருகிறாள். இரவில் வேலை செய்வது மகளுக்குதான் வருத்தம் . வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்க சொல்வாள்” என்றார் ருக்மணி.

தூய்மைப் பணியாளர்

இரவு நேரத்தில் தூய்மைப் பணியில் புதிதாக ஈடுபடும் பெண்களுக்கு, இருட்டு சற்று பயத்தை ஏற்படுத்துகிறது. அதிக பயத்தின் காரணமாக, மருத்துவமனைக்குக்கூட தான் சென்றதாக கூறுகிறார், ருக்மணி.

இலைகள், காகிதங்கள் மட்டுமல்லாது, உபயோகிக்கப்பட்ட நாப்கின்கள், முகக்கவசங்கள் என, உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பல அசுத்தங்களும் சாலைகளில் இருக்கும். அதனையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்ய வேண்டும் என்றார், ருக்மணி.

“சாலையோரங்களில் சிறுநீர் கழித்து வைப்பார்கள். அதனை முகக்கவசம் அணிந்துகொண்டு துடைப்பத்தால் அகற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் சம்மதம் என தெரிவித்தால்தான் இந்த வேலையே கொடுப்பார்கள்,” என்றார், ராதா.

இரவும் தொல்லைகளும்:

சாலைகளை சுத்தம் செய்வதில் உள்ள சிரமங்களைவிட, இரவில் இன்னொரு இன்னலையும் அனுபவிப்பதாக கூறுகின்றனர், ராதா-ருக்மணி.

“இரவில் மது அருந்திவிட்டு வருபவர்களின் தொல்லையும் அதிகம். கொரோனா காலத்தில் சிறிது காலம் டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சந்தோஷமாக இருந்தோம். குடித்து விட்டு வருபவர்கள் எங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த சமயத்தில் பக்கத்தில் ஆண்கள் யாரும் இல்லாவிட்டால் பயமாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் மேனேஜர் முதல் சூபர்வைசர் வரை எங்களை நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள். இரவில் நாங்கள் சுத்தம் செய்யும் பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள்” என்றார், ராதா.

தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு ‘செட்’ உடைகள், ஷூ, முகக்கவசங்கள், தொப்பி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நீண்ட தொலைவுக்கு சாலைகளை சுத்தம் செய்வதால் பெரும்பாலான பெண்களுக்குக் கால் வலி நீடித்த பிரச்னையாக உள்ளது.

தொடரும் புறக்கணிப்புகள்:

கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களால் இத்தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில், பொதுச் சமூகம் அவர்களை பெரும்பாலான சமயங்களில் புறக்கணித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். இன்னும், அந்த புறக்கணிப்புகள் தொடர்கிறது என்றார், ராதா.

“நாங்கள் இந்த வேலையை செய்வதாலேயே சிலர் எங்களை ஒருமாதிரி பேசுவார்கள். அதையெல்லாம் நான் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சில சமயம், எங்களை பேருந்துகளில் ஏற்றுவதற்கே தயங்குவார்கள். கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறோம். இந்த சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே தள்ளிப்போய் நிற்பார்கள்” என, ராதா கூறுகிறார்.

பண்டிகை விடுமுறை தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடையாது.

தூய்மைப் பணி

“தீபாவளி, பொங்கல் அன்றும் வேலை செய்ய வேண்டும். பகலில் குடும்பத்தினருடன் அவசரமாக பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு, இரவில் வேலைக்கு வர வேண்டும். மகள் இருக்கிறாள். அவளுக்காக இந்த வேலை செய்ய வேண்டியுள்ளது” என்றார், ருக்மணி.

தூய்மைப் பணியில் ஈடுபடும் பல பெண்களுக்கு பணியில் மட்டும் அதிக வேலை அல்ல. காலையில் வீட்டுக்கு சென்றதும், சில மணிநேர உறக்கத்திற்குப்பின், வீட்டு வேலைகளையும் இவர்களே கவனிக்க வேண்டியுள்ளது.

“நீண்ட நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்லலாம். அதற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். கடந்த மாதம் காலில் அடிப்பட்டதால், 20 நாட்கள் விடுப்பு எடுத்தேன். அப்போது சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. மருத்துவ சான்றிதழைக் கொடுத்தால்தான் நான் மீண்டும் இந்த வேலையில் இருக்க முடியும்” எனக்கூறுகிறார் ராதா.

கேள்விக்குறியாகும் பணிப் பாதுகாப்பு

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்னையின் அகலமான சாலையொன்றில், நள்ளிரவு ஒரு மணியைக் கடந்தும் விரைந்து செல்லும் வாகனங்களின் சத்தங்களுக்கு இடையில், மலர், மாரியம்மாள் என இரண்டு பெண்கள் மட்டுமே சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.

47 வயதான மாரியம்மாளும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர். பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் ஒரேயொரு மகன் இவருக்கு உள்ளார்.

தூய்மைப் பணியாளர்

“சுமார் 10 ஆண்டுகளாக இந்த வேலை செய்கிறேன். இந்த வேலைக்குப் பாதுகாப்பெல்லாம் இல்லை. சம்பளத்தைப் பிடித்துவிடுவார்கள் என்பதால் நான் விடுப்பு எடுப்பதில்லை” என்றார், மாரியம்மாள்.

எண்ணூரை சேர்ந்த மலர், மெட்ரோ ரயில் மூலமாக சைதாப்பேட்டை வருகிறார். கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துவரும் மலருக்கு, கல்லூரி படிப்பு முடித்த மகனும், 12ஆம் வகுப்பு முடித்த மகளும் இருக்கின்றனர்.

“அம்மா வீட்டில்தான் நான் இருக்கிறேன். இந்த வேலையில் சேர்ந்து ஆண்டு ஆகிறது. அதற்கு முன்பு வீட்டு வேலை செய்துகொண்டிருந்தேன். மகன், மகள் இருவரையும் நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும், இதனால் எனக்கு இந்த வேலை அவசியம்” என்கிறார், மலர்.

“சைதாப்பேட்டை சுரங்கத்திலிருந்து நந்தனம் வரை சாலைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வளவு தூரத்தை தினமும் 3 பேர் சேர்ந்து சுத்தம் செய்வோம். 2 பேர் தான் இருப்பதால், வேலை செய்வது கடினம் என, உடம்பு முடியாமல் ஒருவர் இன்று வேலைக்கு வரவில்லை. ஒருவர் குப்பைகளை வாரினால், ஒருவர் பயந்துகொண்டே தனியாக குப்பைகளை பெருக்க வேண்டும். யாராவது கத்தி ஏதாவது வைத்திருந்தால், மூன்று பேர் இருந்தாலாவது கேட்கலாம்.

தூய்மைப்பணியாளர்

ஒப்பந்ததாரரிடம் இன்னும் சிலரை பணிக்கு அமர்த்த சொல்லியும் வேறு யாரையும் இன்னும் வேலைக்கு எடுக்கவில்லை. இந்த வேலையில் சேர்ந்ததிலிருந்தே மூட்டு வலி வந்துவிட்டது” என தெரிவித்தார்.

“பெரும்பாலான சமயங்களில் நாங்கள் உணவு எடுத்துக்கொண்டு செல்வோம். உணவகம் நடத்துபவர்களும் சப்பாத்தி போன்ற உணவுகளை இலவசமாக வழங்குவார்கள். கொரோனா காலத்தில் யாராவது காரில் வந்து பிஸ்கெட், ரொட்டி முதலியவற்றை தருவார்கள். அதுவும் எல்லா நேரங்களிலும் கிடைக்காது . 12 மணிக்கு சாப்பாடு இடைவேளை என்றால், அரை மணிநேரம் தான் தருவார்கள். ஒருநிமிடம் தாமதமானாலும் எழுந்து வேலை பார்க்க சொல்வார்கள். சில சமயங்களில் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது” என, துடைப்பத்தை நீட்டி சுத்தம் செய்துகொண்டே பேசினார் மலர்.

மாதம் மெட்ரோவில் பயணம் செய்ய சுமார் ரூ.1,500 வரை மலருக்கு செலவாகிறது. தேநீர் செலவு சுமார் 300-400 ரூபாய். இந்த செலவுகளைக் கடந்து, கையில் நிற்கும் பணம் குடும்பத்தை நடத்தப் போதாது என்கின்றனர் இப்பெண்கள்.

“வீட்டில் பகலில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு இரண்டு பேருந்துகள் மாறி இங்கு வருவது கடினம். எனவே, மெட்ரோ ரயிலில்தான் வருகிறேன். போக்குவரத்து, தேநீர் செலவுக்கு அலவன்ஸ் வழங்க ஒப்பந்ததாரரிடம் கேட்டாலும் கொடுப்பதில்லை.

என்ன கேட்டாலும், வேலையை விட்டு எடுத்துவிடுவோம் என்கிறார்கள். உடம்பு முடியாமல் விடுப்பு கேட்டாலும் கொடுப்பதில்லை. உணவுக்குக்கூட வழியில்லாமல் போய்விடும் என்பதால் ஆபத்தான சூழலிலும் வேலை செய்கிறோம்” என்றார், மலர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.

“10 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 5 நாட்களுக்கான சம்பளம்தான் வழங்குவார்கள். 5 நாட்களுக்கான சம்பளம் கிடைக்காது. அந்த 5 நாட்கள் சம்பளத்தைப் பெறவும், மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும். மருத்துவ சான்றிதழை பெற சில நாட்கள் அலைய வேண்டும் என்பதால், அந்த பணமே வேண்டாம் என விட்டுவிடுகிறோம்., வேலை பாக்க சொல்வார்கள். பலரும் சீருடையிலேயே வேலைக்கு வருகின்றனர், திரும்பி வீட்டுக்கு செல்கின்றனர். ஆனால், நான் ஒருபோதும் அப்படி செய்ததில்லை” என்றார் மலர்.

தூய்மைப் பணியாளர்களின் இந்த குறைகள் குறித்து, சென்னை மாநகராசியின் 7 மண்டலங்களில் தூய்மைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனமொன்றின் (Urbaser Sumeet) தகவல், கல்வி, தொடர்புப் பிரிவு தலைவர் ஹரி பாலாஜி பிபிசி தமிழிடம் பேசினார்.

“தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகள், முகாம்கள் நடத்தப்படுகின்றன. எங்களிடம் 12,000 பேர் பணியாற்றுகின்றனர். அதில், சுமார் 6,000 பேர் பெண்கள். சாலைகளை தொழில்நுட்ப உதவியுடன் சுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ அட்டை உள்ளது. பி.எப் பிடித்தம் இருக்கிறது. மருத்துவ சான்றிதழ் அளித்தால் விடுப்பு எடுத்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்றது. ஒவ்வொன்றையும் முறைப்படி கவனிக்க அலுவலர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சியும் இதனை கண்காணிக்கிறது.

எல்லாம் முறைப்படித்தான் நடக்கிறது. அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சாலைகளுக்கு ஏற்ப பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது இல்லை. உணவு இடைவேளை உண்டு,” என தெரிவித்தார்.

துடைப்பம்

போக்குவரத்து, தேநீர் செலவுக்கான அலவன்ஸ் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை இல்லை என தெரிவித்தார் அவர்.

கொரோனா, மழை என எதுவாக இருந்தாலும் இவர்கள் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். சிலர், தங்கள் உறவினர்களாலேயே சில சமயங்களில் புறக்கணிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

“கை கழுவுனியா, முகம் கழுவுனியா என கேட்பார்கள். எங்களால் கொரோனா பரவுமா என பயப்படுவார்கள். இந்த உடையை அணிந்துகொண்டு நான் ரயிலில் வர மாட்டேன். புடவையில் வந்து பின்னர், அலுவலகத்தில் சீருடையை அணிந்துகொள்வேன்”, என கூறுகிறார், மலர்.

உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகும் பெண்கள்:

சாலையில் இப்பெண்கள் அனுபவிக்கும் இன்னொரு பிரச்னை, இயற்கை உபாதைகளை கழிக்க பொது கழிவறைகள் பெரும்பாலும் இல்லாமல் இருப்பதும், இருந்தாலும் அவை அசுத்தமாக இருப்பதும் பிரச்னையாக உள்ளது.

“குப்பைகளை ஏற்றிக்கொண்டு வரும் வாகன ஓட்டுநரிடம் சொல்லி, அதில் ஏறி, அருகிலுள்ள பெட்ரோல் பங்க்குகளில் உள்ள கழிவறைகளை பெரும்பாலும் உபயோகிப்போம். வயதானவர்களால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது. அவர்கள் சாலையோரங்களில் மறைவான இடங்களுக்கு செல்வார்கள்” என்றார், மலர்.

தூய்மைப்பணியாளர்களின் இன்னல்களால், சென்னை மாநகரின் கழிவறை பற்றாக்குறை மற்றும் அதன் தூய்மை குறித்த கேள்விகள் மேலெழுந்துள்ளன.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-60585118