சென்னை: புழல் அருகே பதுக்கிவைத்திருந்த 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை புழல் அருகே லாரியில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

இந்தியாவில் செம்மரக்கட்டைகளை கடத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை புழல் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில், குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, புழல் அருகே உள்ள சித்தராமன் நகர் எனும் பகுதியில் தனியார் லாரி நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றில் 5 டன் செம்மரக்கட்டைகளை பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். லாரியில் இருந்த 5 டன் செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/03/06095337/5-tons-of-Sheepskins-seized-near-Puzhal-Chennai.vpf