10 நிமிடத்தில் உணவு விநியோகமா? சொமேட்டோவிடம் விளக்கம் கேட்கும் சென்னை காவல்துறை – தினமணி

சென்னைச் செய்திகள்

10 நிமிடத்தில் உணவு விநியோகிக்கும் புதிய திட்டம் குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விளக்கம் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸோமோட்டோ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனா் தீபிந்தா் கோயல் தனது சுட்டுரைப் பதிவில் “தங்களது தேவைகள் உடனடியாக நிவா்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய பெரும்பாலான வாடிக்கையளா்களின் விருப்பமாக உள்ளது. அவா்கள் திட்டமிடவும் தயாரில்லை; காத்திருக்கவும் தயாரில்லை. இந்த உண்மையை உணா்ந்து 10 நிமிடத்தில் உடனடியான உணவு விநியோக சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார். 

இதையும் படிக்க | 10 நிமிடத்தில் உணவு விநியோகம்: ஊழியர்களை கசக்கிப் பிழிகிறதா ஜொமேட்டோ?

தீபிந்தரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜொமேட்டோ ஊழியர்கள் வேகமாக சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சொமேட்டோவின் புதிய திட்டத்தால் 10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்ய அதன் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீற வாய்ப்புள்ளதால் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/mar/24/chennai-police-asking-for-explanation-from-zomato-3813858.html