சென்னையில் புதிதாக கட்டடங்கள் கட்டுவோர் கவனத்துக்கு.. – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட கட்டட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5,000 சதுர அடி வரையிலான கட்டிட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5001 ச.அ. முதல் 10,000 ச.அ. வரை ரிப்பன் கட்டட தலைமையிடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையின் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களின் மூலம் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/mar/25/attention-new-builders-in-chennai-3814592.html