சென்னை சென்ட்ரல்: 400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் ரயில் நிலையம் – நடக்கும் மாற்றங்கள் என்ன? – BBC Tamil

சென்னைச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

(இன்று (ஏப்ரல் 1) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)

400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், “சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இடமானது, நீரூற்று, எஸ்கலேட்டர் போன்றவற்றுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பாதாசாரிகளுக்கான பகுதியில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளன.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிரே உள்ள இடத்தில் நீரூற்றுகள் மூலம் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு முன்பாக வணிக பயன்பாட்டிற்காக இரட்டை கோபுரங்கள் கட்டப்படும்.

2,000 கார்கள் பயணிக்கும் வகையில் மூன்று நிலைகளில் நிலத்தடி பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மத்திய சதுக்கம் 1.54 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவிக்கிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பட மூலாதாரம், Subramanian.Ma/Twitter

எய்மஸ் கட்டுமானத்தை விரைந்து முடிக்கவேண்டும்

தமிழ்நாட்டில் பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அதுகுறித்த செய்தியில், “மாநில அரசு, மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவ கல்லூரியாவது இருக்கவேண்டும் என முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்திக்கவுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை விரைந்து முடிக்குமாறும் கோவையில் மற்றுமொறு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு அனுமதிக்குமாறும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கும் முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநில அரசு புதியதாக அறிமுகப்படுத்தவுள்ள மெடிக்கல் வேன்களை பார்வையிட்டார். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 40 மருத்துவ முகாம்களை நடத்தக்கூடிய 389 வேன்களை மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பட மூலாதாரம், Subramanian.Ma/Twitter

புதுச்சேரி முதல்வரை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்கிறது

முதல்-அமைச்சர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுவையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி எல்லையம்மன் கோவில் தெருவில் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தட்டு வண்டி ஒன்றில் மொபட்டை ஏற்றி அதன் அருகே கியாஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலைபோட்டு ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தனர்.

மேலும் அடுப்புக்கூட்டி அதில் மண்பானையை வைத்து விறகு எரித்து சமையல் செய்தனர். அப்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் தனுசு, ரவிதேவ், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசியவர், “5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 127 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மக்கள் தலையில் சுமையை ஏற்றி வைக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசைத் தூக்கி எறிய இந்தப் போராட்டம் நடக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

பக்கத்து நாடுகள் போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். முதலமைச்சர் ரங்கசாமி வழக்கம்போல் வாய்திறக்காமல் மவுனமாக உள்ளார். பதவி பறிபோய்விடுமோ என்று அவர் பயப்படுகிறார்.

புதுவையில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்கிறது. சட்டசபை கூட்டம் நடக்கும்போது பா.ஜ.க.வை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுற்றுப் பயணத்தில் உள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்ளும் இல்லை. சட்டசபை முக்கியமா? சுற்றுப்பயணம் முக்கியமா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று ரூ.6,000 கோடிக்கு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார். நமது மாநில உள்துறை அமைச்சர் எவ்வளவு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார் என்பதை விளக்கவேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பல மாநிலங்களில் பதவி, அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சியை பிடிக்கிறார்கள். அது வெகுநாட்கள் நீடிக்காது,” எனக் கூறியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-60950336