எச்சரிக்கை! பெண் கவுன்சிலர் வேலையில் கணவர் தலையிடக் கூடாது! சாட்டையை சுழற்றும் சென்னை மேயர் பிரியா – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெண் வார்டு உறுப்பினர்கள் அதிகாரத்தை அவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாகச் சென்னை மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் சென்னையில் 51 வது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்சனா என்பவரின் கணவராவார்.

ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் - பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனைஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் – பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை

மேலும் ஜெகதீசன் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

தாக்குதல்

சமீபத்தில் நள்ளிரவு நேரத்தில் ராயபுரம் பகுதியிலுள்ள ஜேபி கோவில் தெருவில் ஜெகதீனர் அவரது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது திடீரென கோபமடைந்து ஜெகதீசனும் உடன் இருந்தவர்களும் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர். அவரது மனைவிதான் கவுன்சிலர் ஆனால் கணவரோ நான்தான் கவுன்சிலர் என்று கூறி காவலர்களை மிரட்டி உள்ளார்.

மேயர் பிரியா ராஜன்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. பெண்கள் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் அவர்களது கணவர் அல்லது உறவினர்களே கவுன்சிலர்கள் போல நடந்து கொள்வதாகவும் ஆங்காங்கே புகார்கள் கிளம்பி இருந்தன. இந்தச் சூழலில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கைத் தொடங்கி வைத்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இது குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ப்ரியா, “சென்னை மாநகராட்சியில் பெண் பாதுகாப்பு உறுதி செய்யவும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்வு காணும் வகையிலும் மண்டலம் 4 மற்றும் 5இல் ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்புடன் சாலைகளில் செல்வதை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டமாகத் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்கப்படும். இதற்காக 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொது கழிப்பறைகள்

அதேபோல சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் புதிய கழிவறைகள் ஏற்படுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொபைல் டாய்லெட் ஏற்கனவே இருந்தது. அதை முறையாகப் பராமரிக்க 5.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலவச பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.

நடவடிக்கை எடுப்போம்

மேலும், பெண் வார்டு உறுப்பினர்கள் அதிகாரத்தை அவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்துவது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மேயர் பிரியா, “வார்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தங்களுக்கு என்ன பணி என்பது அவர்களுக்குத் தெரியும். யாருக்காகப் பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் தான் பணி செய்ய வேண்டும். மற்றவர்கள் தலையிட்டால், தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

English summary
Chennai mayor Priya latest press meet on female councilors: Chennai mayor Priya about Mobile toilets in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mayor-priya-warns-female-councilors-should-carry-their-duties-453651.html